Published : 27 Sep 2022 12:45 PM
Last Updated : 27 Sep 2022 12:45 PM

பாதியில் நின்ற சுகாதாரத் துறை நிகழ்ச்சி - உரிய ஏற்பாடுகள் இல்லை எனக் கூறி வெளியேறிய அமைச்சர்

கோப்புப் படம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த சென்னை எழும்பூரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிகழ்ச்சியை திடீரென புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும் , ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் காலை 10 மணி அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நடைபெற இருந்த இந்த பயிற்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிறைவடைந்த நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டு கோபத்துடன் வெளியேறினார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால் விழி பிதுங்கி நின்ற அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பெயரளவில் 500 செவிலியர்களை மட்டுமே வரவழைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது போன்ற நிகழ்ச்சிகளால் எந்தப் பயனும் இருக்காது என்றும் அதிகாரிகளை கோபமுடன் அமைச்சர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டம் விரைவில் உரிய ஏற்பாடுகளுடன் மீண்டும் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x