Published : 27 Sep 2022 12:22 PM
Last Updated : 27 Sep 2022 12:22 PM
புதுச்சேரி: திமுக எம்பி ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.
பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. இரு அரசு பேருந்துகள், ஒரு கல்லூரி பேருந்து ஆகியவற்றின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததால் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பேருந்து சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திமுக எம்பி ராசாவின் பேச்சை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது.
புதுச்சேரியில் அண்ணா சாலை, நேரு வீதி, காமராஜர் வீதி, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கவில்லை.
பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. அரசு பள்ளிகள் இயங்கின. பெரும்பாலான கல்லூரிகள் இயங்கின. மங்கலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர். இதேபோல், புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் காலையில் இயங்கிய இரண்டு தமிழக அரசு பேருந்துகளை வில்லியனூர் அருகே மர்ம நபர்கள் கல் வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர். இதனால் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி-தமிழக எல்லைப்பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் பயணிகளை தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகள் இறக்கிவிட்டு திருப்பி சென்றன.
இதனால் மக்கள் புதுச்சேரி பகுதிக்கு நடந்து வரும் சூழல் ஏற்பட்டது. புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக காலை நிலவரப்படி கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. திறந்திருந்த சில தனியார் பள்ளிகளை மூடுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதாக புகார்கள் எழுந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT