Published : 27 Sep 2022 06:26 AM
Last Updated : 27 Sep 2022 06:26 AM

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழகத்தில் 11 வழக்குகளில் 14 பேர் கைது: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக பெட்ரோல், மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இவ்வாறு தொடர்ச்சியாக பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இவ்வாறு தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை மாநகர் குனியமுத்தூர் காவல் நிலைய எல்லையில் ஒரு வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும், சுப்புலட்சுமி நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சம்பவத்தில் மதுக்கரை ஜேசுராஜ், குனியமுத்தூர் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் கார், ஆட்டோக்களில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய பொள்ளாச்சி முகமது ரபிக், மாலிக் என்ற சாதிக் பாஷா, ரமீஸ் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லையில் ஒரு வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் கிச்சிபாளையம் செய்யது அலி, பொன்னம்மாபேட்டை காதர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகரம் கீரத்துறை காவல் நிலைய எல்லை மேலஅனுப்பானடி பகுதியில் ஒரு வீட்டின் கார் ஷெட் அருகே மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் மதுரை நெல்பேட்டை சம்சுதீன் என்ற எட்டுபாவா சம்சுதீன், சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லையில் கார், இருசக்கர வாகனங்கள் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் பேகம்பூர் சிக்கந்தர் கைது செய்யப்பட்டார். ஈரோடு தாலுகா காவல் நிலைய எல்லை டெலிபோன் நகரில் உள்ள மரச்சாமான் கடையில் தீ வைக்க முயன்ற வழக்கில் ஈரோட்டைச் சேர்ந்த சதாம் உசேன், ஆசிக், ஜாபர், கலீல் ரஹ்மான் கைது செய்யப்பட்டனர். இதுவரை 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவற்றில் 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், மற்ற வழக்குகள் மீதும் விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x