Published : 27 Sep 2022 06:41 AM
Last Updated : 27 Sep 2022 06:41 AM
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக்கடன் பெற்ற ஒரு லட்சம் பேர் உறுதிமொழிப்பத்திரம் அளித்தால் அவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக்கடன் பெற்றவர்களில், பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு அக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. இந்நிலையில், பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி ஆகியவை குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், தற்போது வரை 5.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,969 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. கால்நடைகள் வாங்குவதற்காக 1.24 லட்சம் பேருக்கு ரூ.581.34 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை, 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற ஒரு லட்சம் பேர் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை இதுவரை தரவில்லை. அவ்வாறு தந்தால், அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். வடகிழக்கு பருவமழையால் காய்கறி விலை உயரும் பட்சத்தில், குறைந்த விலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
ரேஷன் கடையில் ‘கூகுள் பே’ - சென்னையில் அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 நியாய விலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் ‘கூகுள் பே’ மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT