Last Updated : 14 Nov, 2016 02:25 PM

 

Published : 14 Nov 2016 02:25 PM
Last Updated : 14 Nov 2016 02:25 PM

சபரிமலை சீஸன் தொடங்கும் வேளையில் முக்கடல் சங்கமத்தில் முன்னேற்பாடுகள் இல்லை: பக்தர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா?

சபரிமலை சீஸன் நெருங்கும் வேளையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் முன்னேற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் சபரிமலை சீஸனில் தான், அதிகமான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் கூடுவார்கள். வரும் 17-ம் தேதியில் இருந்து ஜனவரி 20-ம் தேதி வரை 60 நாட்களுக்கும் மேல் கன்னியாகுமரி திருவிழாக்கோலமாக காட்சியளிக் கும்.

பக்தர்கள் ஆர்வம்

ஆனால் இங்கு வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத சூழலே ஆண்டு தோறும் நீடிக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுப்பதில்லை. குறிப்பாக இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் புனித நீராடுவதற்காக ஐயப்ப பக்தர்கள் அதிகம் ஆர்வம்காட்டுவர்.

ஆனால் அவர்கள் நீராடும் பகுதி, ஆபத்து மையமாக மாறி யுள்ளது. அதை சீரமைத்து பாது காப்பான பகுதியாக மாற்ற இந்து அறநிலையத்துறையோ, பேரூ ராட்சி நிர்வாகமோ, மீன்வளத் துறையோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.

பல ஆண்டு கோரிக்கை

முக்கடல் சங்கமத்தில் குளிக்கும் பகுதியில் உள்ள கூரிய கற்கள், அனைவரின் காலையும் காயப்படுத்தி வருகின்றன. மேலும், பலர் அவற்றில் வழுக்கி கீழே விழுவது தொடர்ந்து நடைபெறுகிறது. கற்களை அகற்றி சிரமமின்றி குளிப்பதற்கு வசதி செய்துகொடுக்குமாறு பல ஆண்டுகளாக பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுற்றுலா வரும் இளைஞர்கள், முக்கடல் சங்கமத்தில் நீராடும் பகுதியை தாண்டி உள்ள சிறிய பாறைகளில் அமர்ந்து விளையாடுவதும், செல்பி எடுப்பதுமாக உள்ளனர். கடல் சீற்றமான, விபத்து நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்ட இங்கு, சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் முன்னேற்பாடுகள் இல்லை.

போலீஸார் இல்லை

இதுகுறித்து கோவையில் இருந்து குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணி நவுஸாத் கூறும் போது, ‘அனைத்து மதத்தினரையும் கவரும் விதமாக கன்னியாகுமரி இயற்கை சூழலுடன் உள்ளது. இங்குள்ள முக்கடல் சங்கமம் பகுதியில் நின்று இயற்கை அழகை ரசிப்பதற்கு இதமாக உள்ளது. ஆனால் ஒரு போலீஸாரையோ, தீயணைப்பு வீரர்களையோ இங்கு காண முடியாதது வருத்தமடைய செய்கிறது. மேலும் இங்குள்ள போலீஸ் உதவி மையமும் பூட்டியே கிடக்கிறது.

ஆர்வமிகுதியில் அங்கு நிற்கும் சுற்றுலா பயணிகளுக்கு கடல் பகுதியில் ஏதாவது விபரீதம் நிகழ்ந்தால் கூட, அவர்களை மீட்க முடியாத நிலை ஏற்படும். எனவே, பல்லாயிரம் பேர் கூடும் முக்கடல் சங்கமத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்’ என்றார் அவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x