Published : 27 Sep 2022 04:15 AM
Last Updated : 27 Sep 2022 04:15 AM

4 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆரணி அருகே 6 மணி நேரம் மாணவர்கள் சாலை மறியல்

ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள்.

திருவண்ணாமலை

ஆரணி அருகே மாணவரை தாக் கியதாக கூறப்படும் 4 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மணி நேரம் மாணவ, மாணவிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 வகுப்பு மாணவரை, ஆசிரியர்கள் கடந்த வாரம் தாக்கியதாக சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மாணவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால், அவரை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் நடவடிக்கை மேற் கொண்டனர் என கூறப்படுகிறது.

இருப்பினும், மாணவரை தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் மாணவரின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும், மாணவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் குரல் எழுப்பின. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில், மாணவரை, ஆசிரியர்கள் தாக்கியது மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இயற்பியல் பாட ஆசிரியர் வெங்கட்ராமன், ஆங்கில பாட ஆசிரியர் தீலிப்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும், ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியனை இடமாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், 4 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், காலாண்டு தேர்வை புறக்கணித்து நேற்று முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள், ஆரணி-வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.

சிஇஓ மீது அதிருப்தி: இது குறித்து மாணவர்கள் கூறும்போது, “4 ஆசிரியர்கள் மீதும் ஒருதலைபட்சமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவரை தாக்கி யதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து முழுமையாக அவர் விசாரணை நடத்தவில்லை.

ஒவ்வொரு மாணவரையும் நல்வழிப்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. இதைத்தான் அவர்கள் செய் துள்ளனர். 4 ஆசிரியர்களும் நன்றாக பாடம் கற்பித்து வந்தனர்.

திடீரென அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது, எங்களது கல்வியை பாதிக்கும். 4 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அவர்களை எங்கள் பள்ளியில் மீண்டும் பணியமர்த்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும்” என்றனர்.

எஸ்.பி., பேச்சுவார்த்தை: இதைத்தொடர்ந்து மாண வர்கள், பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அவரது வேண்டுகோளை ஏற்று 6 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக நேற்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கூடாது என கூறி தாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவருக்கு ஆதரவாக சாலை மறியல் நடைபெற்றது.

இதையறிந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து, சாலை மறியலை சிறிது நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

சரமாரி கேள்வி கேட்ட மாணவர்கள்: இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி சென்றுள்ளார். அப்போது அவரிடம் மாணவர்கள், பெற்றோர், கிராம மக்கள் ஆகியோர் சரமாரியாக கேள்வியை எழுப்பினர்.

அவர்களது கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் திணறியுள்ளார். இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வந்ததும், மாணவர்கள் உடனான பேச்சுவார்த்தையில் இருந்து முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஒதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x