Published : 27 Sep 2022 03:30 AM
Last Updated : 27 Sep 2022 03:30 AM
புதுச்சேரி: முதல்வரை விமர்சித்து போராட்டம் நடத்திய பாஜக ஆதரவு சுயேட்சை, அவருக்கு பாஜக எம்எல்ஏ ஆதரவு அளித்தது தொடர்பாக பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களிடம் பேச என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆலோசித்தபிறகு கண்டனத்தை பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி சமாதானம் செய்தார்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில், அதிருப்தியடைந்த பாஜக எம்எல்ஏக்கள், ஆளும் கூட்டணியில் இருந்தும், அனைத்துவிதத்திலும் புறக்கணிக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவான அங்காளனும், முதல்வர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, முதல்வரை பதவியிலிருந்து நீக்கக்கோரி, சட்டப்பேரவை வளாகத்தில் அண்மையில் அவர் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார். அதற்கு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் திருமுருகன், லட்சுமிகாந்தன், பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். உடல்நிலை சரியில்லாததால் அமைச்சர் தேனீ சி.ஜெயக்குமாரும், காரைக்காலில் உள்ள அமைச்சர் சந்திர பிரியாங்காவும் கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையிலுள்ள அவரது அறையில் எம்எல்ஏக்கள் சந்தித்துப்பேசினர். கூட்டணியில் உள்ள பாஜக, பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள், தொடர்ந்து கூட்டணி தர்மத்தை மீறி முதல்வரை விமர்சிப்பது சரியானதில்லை. கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றனர். அதற்கு, "எதுவும் தேவையில்லை" என சமாதானப்படுத்தி முதல்வர் ரங்கசாமி அனுப்பினார்.
என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடர்பாக அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகத்திடம் கேட்டதற்கு, "நான்கு முறை முதல்வராக இருந்த ரங்கசாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி அவமதிப்பது சரியல்ல. பேரவை வளாகத்தில் எம்எல்ஏவை போராட்டம் நடத்த எப்படி அனுமதித்தனர் என தெரியவில்லை. இதனால் பேரவைத்தலைவர், அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்களை சந்தித்து பேசுவோம். தன்மானத்தை ஒருபோதும் விட்டுதரமாட்டோம். கூட்டணி தர்மத்தை மீறினால் ஏற்கமாட்டோம்" என்றார். என்.ஆர்.காங்கிரஸ் உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "நியாயமான ஆதங்கத்தை முதல்வரிடம் தெரிவித்தனர். சட்டப்பேரவைத் தலைவர், உள்துறை அமைச்சரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண்போம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT