Published : 26 Sep 2022 10:05 PM
Last Updated : 26 Sep 2022 10:05 PM
கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்து தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ-யைச் சேர்ந்தவர் 15-க்கும் மேற்பட்டோர் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ மூலம் நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும் அதுபோல் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்கும்.
முதல்வருக்கு, இந்தியன் பீனல் கோட் தெரியுமா என்று தெரியவில்லை. 5 ஆயிரம் நாட்கள் காவல்துறையில் பணியாற்றி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐபிசி வழக்குகளை போட்டு இருக்கின்றேன். எனவே, சிசிடிவி எங்கே இருக்கிறது என்று பார்த்துவிட்டு, ஒரு குண்டை போட்டுச் சென்றால் நம்மை தொடமாட்டார்கள், மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என நினைக்க கூடாது. இங்கே இருக்கும் தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும் அதுபோல் நடக்க வேண்டும் என்றால் அது நடக்கும்.
நாங்கள்தான் சுயமரியாதைகாரர்கள். திமுகவினர் சுயமரியாதைக்காரர்கள் கிடையாது. பாஜகவுக்கு சொந்தமான சமூகநீதி, சுயமரியாதை போன்றவற்றை திமுகவினர் வெட்டி ஒட்டி வைத்து இருக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து, அவராகவே அவருக்காக எழுதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். சேற்றில் மூழ்கி எழுந்துவரும் உருவம் வரும்போது, ஒதுங்கிப்போய் பணிகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள்தான் 15 மாதங்களாக நகர்ந்து சென்று வருகிறோம்.
தொடர்ந்து நகர்ந்து போவோம் என்று முதல்வர் நினைத்தால் அது தவறு. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அனைத்துக்கும் கமிஷன் வாங்குகிறார். சோலார் மின்சாரம் அமைக்க வேண்டுமெனில் கமிஷன், மாநகராட்சி டெண்டரில் கமிஷன், திமுக மாவட்ட செயலாளர் தேர்வுக்கு பணம், ஏற்றிய மின் கட்டணத்தை குறைப்பதற்கு பணம் என அவரின் முழுநேர வேலை என்பதே கோவையின் சொத்தை சுரண்டி, சுரண்டி கோபாலபுர குடும்பத்தை வளப்படுத்த வேண்டும் என்பதுதான்.
இன்னும் இந்த ஆட்டத்தை கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை. நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லையென்றால், மாற்றப்படுவீர்கள். தமிழக பாஜக தொண்டர்கள் முதல்வரின் வீட்டை முற்றுகையிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. எங்களை தாண்டி நீங்கள் கோட்டைக்கு செல்ல வேண்டும். அந்த சூழலை எங்களுக்கு ஏற்படுத்தாதீர்கள். முதல்வர் நடுநிலை முதல்வராக நடந்துகொள்ளும் வரை பாஜக தொண்டன், கன்னியத்தோடு, கட்டுப்பாடோடு இருப்பான். நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறார். தயவு செய்து நல்ல ஆயுதத்தை நீங்கள் எடுக்க தீர்மானியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT