Published : 26 Sep 2022 06:00 PM
Last Updated : 26 Sep 2022 06:00 PM
மதுரை: குலசேகரபட்டினத்தில் இன்று தொடங்கி 10 நாள் நடைபெறும் தசரா கலை நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம், ஆனால் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பத்து நாட்களும் குலசேகரபட்டினம் முழுவதும் பல்வேறு குழுக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சிகளில் ஆபாசம் அதிகமாக இருப்பதால் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் தசரா விழாவில் ஆபாச நடனங்கள், பாடல்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், திருச்செந்தூரை சேர்ந்த ஸ்ரீ அம்பிகை தசரா குழு செயலாளர் கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக கடவுள், விலங்குகள், பறவைகள் போன்று வேடம் அணிந்து வழிபடுவது வழக்கம். குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவால் தசரா நிகழ்வுகளில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தசவரா விழாவில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர், நடிகைகள் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: ''குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. தசரா விழாவில் குலசேகரபட்டினம் ஊருக்குள் உள்ளேயும், வெளியேயும் ஆபாசன நடனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆபாச நடனம், வார்த்தைகளை பயன்படுத்தும் கலைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT