Published : 26 Sep 2022 04:28 PM
Last Updated : 26 Sep 2022 04:28 PM
கோவை: “பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித சமரசமும் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், கோவைப்புதூர், குனியமுத்தூர், ஒப்பணக்கார வீதி, 100 அடி சாலை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களை வானதி சீனிவாசன் இன்று (செப்.26) பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை பாஜக மாநகர், மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதேபோல, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக கட்சிக்கு ஓர் அறிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மண்டலத்தில் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் ஆகியோர் இணைந்து பார்வையிட்டு அறிக்கை அளிக்க உள்ளோம். கோவை மாவட்டம் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காக இருக்கும் ஒரு மாவட்டம். எனவே, இங்கு நடக்கும் சிறு, சிறு சம்பவங்கள் கூட மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். எனவே, இங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும்.
சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும். அமைதியை குலைத்துவிட்டு, வளர்ச்சி என்பதை நினைத்துப்பார்க்க முடியாது. கோவை பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று வரும் பகுதி. இங்கு சட்டம், ஒழுங்கு கெடுவதை முதல்வர் அனுமதிக்கக் கூடாது. நாட்டின் ஒற்றுமைக்கு, முன்னேற்றத்துக்கு எதிராக இருக்கும் சக்திகள் இதுபோன்ற சக்திகள் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களில் ஈடுபடுகின்றன.
தன்னை விளம்படுத்திக்கொள்வதற்காக இதுபோன்ற யாரேனும் செய்திருந்தாலும் அவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை, அரசியல் காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், கடமையிலிருந்து அரசு விலகுகிறது என்று அர்த்தம். எனவே, எந்தவித சமரசமும் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT