Published : 26 Sep 2022 03:47 PM
Last Updated : 26 Sep 2022 03:47 PM
சென்னை: சென்னையில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காது என்று ஓரளவு நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், தற்போதைய மழைநீர் வடிகால் பணி நிலவரம் குறித்து பார்ப்போம்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கடந்த ஆண்டு சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. முக்கிய கால்வாய்களின் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறை சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் தேங்காது என ஓரளவிற்கு நம்பிக்கொண்டுள்ளேன். எதிர்பார்க்கிறேன். மழை நீர் தேங்காது என்ற நினைப்போடு மெத்தனமாக இருந்துவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.
சென்னையில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையிலில், முதல்வர் ஓரளவு மட்டும் நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 75 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவளம், கொசஸ்தலையாறு திட்டங்களை முடிக்க 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது. மீதம் உள்ள பணிகள் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகும். இந்நிலையில், இந்தப் பணிகளில் 75 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
சிங்கார சென்னை திட்டத்தில் 40 கிலோ மீட்டர், வெள்ள மேலாண்மை நிதியில் 61 கிலோ மீட்டர், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 6 கிலோ மீட்டர், உலக வங்கி நிதியில் 33 கிலோ மீட்டர், மூலதன நிதியில் 800 மீ நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளது. அதாவது சிங்கார சென்னை திட்டத்தில் 70 சதவீதம், வெள்ள மேலாண்மை நிதியில் 62 சதவீதம், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 77 சதவீதம், உலக வங்கி நிதியில் 86 சதவீதம், மூலதன நிதியில் 83 சதவீதம் மட்டுமே பணிகள் நிறைவந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 75 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT