Published : 26 Sep 2022 07:02 AM
Last Updated : 26 Sep 2022 07:02 AM

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணங்கள்: உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்துத் துறை தீவிரம்

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முயற்சியில் போக்குவரத்துத் துறை ஈடுபட இருப்பதாக துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வழக்கமான நாட்களில் அரசு பேருந்துகள் அளவிலான விலைக்கு பயணச்சீட்டுகளை வழங்கும் ஆம்னி பேருந்துகள், பண்டிகை நாட்களில் மட்டும் அளவுக்கு அதிகமாகக் கட்டணத்தை வசூலிப்பதாக மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அதே நேரம், ஆம்னி பேருந்துகளில் உள்ள சொகுசு வசதிகள் காரணமாகவும், வார நாட்களில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவுமே இவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப் படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தகைய சொகுசு வசதிகளை வழங்குவதால் பண்டிகை காலங்களில் இருப்பதுதான் ஆம்னி பேருந்துகளின் உண்மையான கட்டணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியதாவது: கரோனா பேரிடருக்கு முன் 4 ஆயிரமாக இருந்த ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது 1,500 ஆகக் குறைந்துள்ளது. அந்த சமயத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை. ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிய பிறகு அதிக கட்டணம் வசூலிப்பது கிடையாது. கட்டணத்தை ஏற்றுக் கொண்டுதான் பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். இந்தக் கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்கும் உரிமையாளர்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. விழாக் காலங்களில் இந்தக் கட்டணங்களுக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்க அனைத்து உரிமையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்

உரிமையாளர்களின் விளக்கம் இவ்வாறு இருக்க அரசு பேருந்துகளை விடக் கட்டணம் பல மடங்கு இருப்பதால், இதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதற்கான நடவடிக்கையில் போக்குவரத்துத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை வரன்முறைப்படுத்துவதற்கான அரசின் திட்டம் குறித்து ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியதாவது:

ஒப்பந்த பேருந்துகளில் மட்டுமே..

ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை சுமார் 10 முதல் 15 பேருந்துகள் மட்டுமே அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வருகின்றன. கடந்த முறை நடத்தப்பட்ட சோதனையில் 97 பேர் மட்டுமே தங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்தனர். மற்ற அனைவரும் விரும்பி பயணிப்பதால் அவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை. ரயில்வேயில் சிறப்பு தட்கல் முறையில் மத்திய அரசே கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் இங்குள்ள அரசு, தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

நீதிமன்றம் சென்றும் பலனில்லை

ஆம்னி என்னும் ஒப்பந்த பேருந்துகளில் மட்டுமே நேரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் அவர்கள் தற்போது அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சென்றும் பலனில்லை.

இது தொடர்பாக அடுத்த வாரம் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். வரும் பண்டிகைக் காலங்களில் நியாயமான கட்டணத்தை வசூலிக்க அறிவுறுத்தவுள்ளோம். இதில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். அதேநேரம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் சிறப்புப் பேருந்துகளையும் இயக்குகிறோம். மக்கள் அரசு பேருந்துகளை அதிக அளவு வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x