Published : 14 Nov 2016 03:20 PM
Last Updated : 14 Nov 2016 03:20 PM
நாட்டில் பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படாததால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த நெட்டிசன்களின் குமுறல் பதிவுகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
ஏடிஎம்மிலும் டாஸ்மாக்கிலும் தவிர எந்தக் கடைகளிலும் கூட்டம் இல்லை. அத்திவாசிய மளிகைப் பொருட்கள், கொஞ்சம் காய்கறி, கொஞ்சம் பழங்கள் என யோசித்து யோசித்தே கையில் இருக்கும் காசைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. 2000 ரூபாய் நோட்டை வாங்கிப் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். முழுவதுமாய் செலவழித்தால் ஒழிய, மீதிக் காசை சில்லறையாய்த் தர, கடைகளிலும் பணம் இல்லை. ஒன்றரைக் கிலோ வெங்காயம் பத்து ரூபாய் என வண்டிக்காரரிடம் வாங்குகையில் விவசாயியின் மகளான எனக்கு மனசெல்லாம் வலி.
50 ரூபாயில் சி.வெங்காயம், பெ.வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி எல்லாம் வாங்கியாயிற்று. ஏற்கெனவே விவசாயி பிழைப்பு மோசம். இனி எப்படி விளைவித்து, இன்னும் அடிமாட்டுவிலைக்கு விற்று..? மளிகைக் கடைகளிலேயும் உணவுப் பொருட்கள் எவையுமே அதிக நாட்கள் ஸ்டாக் வைக்க முடியாது... கெட்டுப் போனபின் எடுத்து வெளியே கொட்டுவதா? யோசிக்க யோசிக்க எதுவும் பிடிபடவில்லை. குழப்பமும் வேதனையும் மட்டுமே மிச்சம். சரியாகும் என்று சொல்வதைக் கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் எப்போது?
அடுத்தவன் கனரா பேங்கு.. அவன் சம்சாரம் ஐசிஐசிஐ..
பொண்ணுதான் கடைக்குட்டி.. அவ இண்டியன் பேங்க்..
பரவாயில்லை சார்.. எல்லாம் செட்டிலாயிட்டாங்க போல..
கடுப்பைக் கிளப்பாதீங்க சார்.. எல்லாரும் ஏடிஎம் வரிசையில நிக்கறாங்க..
ஓரிரு நாள்தான் சிக்கல் இருக்கும் என எண்ணியிருந்த பொதுமக்கள் இப்போது வாரக்கணக்கில் இப்பிரச்னை நீளக்கூடும் என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவில்லை. ஏ.டி.எம். இயந்திரங்களில் உடனுக்குடன் பணத்தை நிரப்பவில்லை. பிரச்சினையை பெருமளவு தீர்க்கும் 500 ரூபாய் நோட்டுகளை இன்னும் அமலாக்கவில்லை என சாமானிய மக்களை மிகப்பெரிய பாதிப்பில் தள்ளி இருக்கிறது இந்த அறிவிப்பு.
ஓர் அசாதாரணமான சூழலில் அரசாங்கம் அதிவிரைவாகச் செயல்பட வேண்டும்! பணமாற்றத்தைப் பற்றிப் பிரதமர் பத்து மாதங்களாகத் திட்டமிட்டேன் என்கிறார், இங்கே அவர் கொண்டு வந்த மாறுதலை விமர்சிக்கவில்லை, அதன் செயல்முறைகளையும், நீண்டுகொண்டே போகும் காத்திருத்தலையும் தவிர்த்திருந்தால் மக்கள் உண்மையில் இதைப் பாராட்டி இருப்பார்கள்!
ஒரு சாதாரண நேரத்தில் என்னுடைய கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு நான் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை, "நீ இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும்" என்று யாரும் சொல்லப்போவதில்லை! இந்த மாற்றத்தை எதிர்பார்த்த அரசு, ஏடிம் மையங்களில் உள்ள காஸெட்டில் புதிய இரண்டாயிரம் ரூபாய் வைப்பதற்கு மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே ஏன் அறியவில்லை? மற்ற ரூபாய் நோட்டுகள் அளவுகளில் அதைக் கொண்டு வந்திருந்தால் கூட, சிறிது சிரமங்களைத் தவிர்த்திருக்கலாம்!
ATMல பணமே இல்லையாம். இதுல உச்ச வரம்பு அதிகரிப்பாம். இல்லாத பணத்த எப்படி எடுப்பது.
பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன்.
இன்று திட்டமிட்ட ரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க போதிய பணமில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என நேற்றே முயற்சித்தாலும் காத்திருப்போர் பட்டியல் 50க்கு மேல் இருந்தது. எனவே பயணச் சீட்டு எடுக்காமல் பயணிப்பது என முடிவெடுத்தேன். இன்று அதிகாலையிலேயே பேருந்துக்கு நிற்கும் நேரத்தில் ஒரு ஆட்டோ வந்தது. எங்க சார் போகணும் என்றார் ஆட்டோகாரர். சென்ட்ரல் போகணும், கையில் 10 ரூபாய்தான் இருக்கு நீங்க போங்கண்ணே என்றேன். பரவாயில்லை வாங்க, யார் கையிலும் பணமில்லை, நானும் அங்கேதான் போறேன் என ஏற்றிக் கொண்டார்.
ரயிலில் பரிசோதகர் வந்தார். ஏடிஎம்களில் பணமில்லை, அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை, இது என் பிரச்சினை அல்ல, அரசு உருவாக்கிய பிரச்சினை. அதனால் அபராதமும் கட்ட முடியாது, இல்ல சட்டபடிதான் நடந்துக்க வேணும் என்றால் என் ஏடிஎம் கார்டை தருகிறேன். அபராதம் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதா என அவருடன் வாதம் செய்ததில், உட்காருங்க சார் என்றார்.
இது அரசு உருவாக்கிய நெருக்கடி. சிரமத்தை பொறுத்துக் கொள்ள சொல்லும் அரசுக்கு, அதனால் உருவாகும் நெருக்கடிகளை உணர்த்த வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. 2000 ரூபாய் நோட்டை பார்த்ததும் பல்லிளித்துக் கொண்டு செல்பி எடுக்கும் கேவலமும், 4000 ரூபாய்க்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்கும் மங்குனித்தனமும் நிறைந்திருக்கும் வரை, அரசுகள் மக்களின் நெருக்கடிகளை உணரப்போவதில்லை. #தனியொருவன்
தெருவிற்கு தண்ணீர் லாரி வந்தால் ஓடிய மக்கள்!
இன்று ஏடிஎம் திறந்தால் ஓடுகிறார்கள்!!
விடிந்தால் தங்கைக்கு திருமணம். 'வாடகையை ரொக்கமா கொடுத்துடுங்க' என்கிறார் மண்டப உரிமையாளர். சமையல் கான்ட்ராக்டர், 'என் சம்பளத்தை கூட அப்புறம் வாங்கிக்கிறேன். ஆனா பொருட்களை வாங்கிக் கொடுத்தா சமைக்கிறேன்' என்கிறார். அய்யர் பணம் முதல் ரேடியோ செட் வாடகை வரை எல்லோரும் பணமாக கேட்கின்றனர். இவர்களுக்கு கொடுக்க மொய் பணத்தைதான் நம்பியிருந்தார். மொய் போட வந்தவர்கள் 100 ரூபாய் நோட்டுகளுக்கு எங்கே போவது? மேலும் கையில் இருக்கும் 500, 1000 யை மாற்றிக்கொள்ள அது சரியான தருணம் அல்லவா? திருமணம் நடந்தது. மொய்யும் வந்தது.
எல்லாம் செல்லாத்தாள்கள். யாருக்கும் செட்டில் செய்ய முடியவில்லை. 'நாட்டு நலனுக்காக தியாகம் பண்ணு, தியாகம் பண்ணுணா, என் தங்கச்சி கல்யாணத்தைதான் நிறுத்தணும்' என்கிறார் அந்த அண்ணன். இவர் ஒருவர் மட்டுமல்ல.... இந்த நாட்களில் கல்யாணக்காரர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பம், மிகக் கொடியது.
*
ஏற்கெனவே உள்ள ரூபாய் நோட்டுகளைவிட, புதிய ரூபாய் நோட்டுகள் அளவில் 26% சிறியதாக இருப்பதால், புதிய நோட்டுகளை ஏ.டி.எம் இயந்திரங்களில் பொருத்த முடியவில்லை. நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏ.டி.எம்-களிலும் இதை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை வங்கிகள் ஏ.டி.எம்-களில் 100 ரூபாய் தாள்களை மட்டும்தான் நிரப்பியாக வேண்டும்.
இதனால் 50 லட்சம் ரூபாய் கொள்ளளவு கொண்ட இயந்திரத்தில் 10 லட்ச ரூபாய்தான் நிரப்ப முடிகிறது. ஆனால் 3 நாட்களில் வர வேண்டிய மக்கள் கூட்டம் 3-4 மணி நேரத்துக்குள் வருவதால் பணம் விரைந்து தீர்ந்துவிடுகிறது.
தற்சமயம் பலர் ATM மிஷினாக வாழ்கின்றனர். #ஒத்த ரூபா கூட இல்லாமல்
இரண்டு மணி நேரம் லைன்ல நின்னு மிசின் கிட்ட போனா, எச்டிஎப்சி கார்டு போட்டா சர்வர் டவுனுன்னு வந்துது. சரின்னு எனக்கு அடுத்து நின்னவர் ஆக்சிஸ் கார்டு போட்டார் அதுவும் சர்வர் டவுனு, வெளிய வந்தா கியூல மறுபடியும் ரெண்டு மணி நேரம் நிக்கனும் சோ வீட்டுக்கு போன் பண்ணி ஐசிஐசிஐ கார்டு எடுத்துட்டு வரச்சொல்லிட்டு ஏடிஎம் மிசின் உள்ளேயே ஓரமா நின்னுகிட்டு இருந்தேன். கார்டும் வந்துச்சு. அந்த கார்ட என்னோடதுதான் சொல்லி வாங்கங்குள்ள கியூல நிக்கறவங்க சத்தம் போடுறாங்க.
அவங்களுக்கு புரிய வெச்சு மிஷின் கிட்ட போனா எனக்கு முன்னாடி நின்னவரோட கேஷ் குளோசாயிட்டு....சோ ...டோட்டல் டைம் வேஸ்ட்... கால் வலி மிச்சம்..ரிட்டர்ன் ஹோம்...என் பணத்த நானே எடுக்க முடியல...ஏசப்பா...
மோடி அறிவித்த அன்றோ மறுநாளோ கூட இவ்வளவு எதிர்ப்பு இல்லை. கடந்த மூன்று நாட்களாகத்தான் இவ்வளவு கடும் எதிர்ப்பு. இவ்வளவு பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிற அரசு எவ்வளவு முன் யோசனை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்?! இதன் சாதக பாதக அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்திருக்கவேண்டும்.
ராத்திரி 7 மணிக்கு டிவியில் தோன்றி 12 மணியிலிருந்து நோட்டு செல்லாதுன்னு சொல்றாரு சரி. அதன் பிறகான நடவடிக்கைகள் என்ன? ஓர் எளிய உதாரணம் 2000 ரூபாய் நோட்டு. ஏடிஎம்களில் ஏன் பணம் உடனே தீர்ந்துவிடுகிறது? 2000 ரூபாய் நோட்டு இயந்திரத்தில் பொருந்தக்கூடியதாக இல்லை. சரி வங்கிகளிலாவது போதுமான கையிருப்பு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மக்களின் நிலைமை என்ன? கையில் பணம் உள்ளது. ஆனால் செலவு செய்ய முடியாது.
ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் ரோட்டில் ஒரு இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால் அது டாஸ்மாக். இப்போது ஏ.டி.எம்.
இருக்கும் பணம் செல்லாது என்று அறிவிக்கும் முன் ஏடிஎம் தொழில்நுட்பங்களை முதலில் சரி செய்திருக்க வேண்டும், போதிய அளவு மாற்றுப் பணத்தை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராமங்களில் பல இடங்களில் வங்கிகளே இல்லாத நிலையில் அங்கெல்லாம் மாற்று ஏற்பாடுகளாக என்ன செய்தது அரசு? ஓரளவு பணம் தயார் நிலையில் வந்ததுடன், அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம், பென்ஷன்தாரர்கள், வயது முதிர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு சரியான முறையில் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம்
வங்கி அலுவலகத்தில் இதற்கென பிரத்யேக பிரிவுகள் ஏற்படுத்தி அவர்களுக்கு சிரமங்களை தவிர்த்திருக்கலாம், நடமாடும் ஏடிஎம்களை அதிக அளவில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம். கறுப்புப் பண முதலைகளுக்கு தேள் கொட்டியது விஷம் ஏறியது என்பதெல்லாம் அடுத்த விஷயம், அவர்களின் அன்றாட தேவைகள் இதனால் பாதிக்கப்படப்போவதில்லை.
ஆனால் அன்றாடத் தேவைகளுக்கு கூலி வேலை செய்தும், தினப்படி வேலைக்கு சென்றால்தான் உணவு என்பவன் வங்கி வாசலிலும், ஏடிஎம்மிலும் மணிக்கணக்கில் நிற்க வைத்ததுக்கு என்ன விளக்கம் தரப் போகிறது அரசு, படிப்பறிவில்லாத, வங்கி வாயிலை கூட மிதிக்காத பல லட்சம் சாமானியனின் வாக்கில் ஆட்சிக்கு வந்த அரசு அந்த சாமானியனுக்கு என்ன செய்தது??
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT