Published : 18 Nov 2016 08:50 AM
Last Updated : 18 Nov 2016 08:50 AM

தமிழர்களின் பெருமையை மறைத்துவிட்டதாக வேதனை: சோகத்தில் மூழ்கிய தென் மாவட்ட ஜல்லிக்கட்டு கிராமங்கள்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டி கையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளை யாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஆண்டு கடைசிவரை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்குமா? என்ற எதிர் பார்ப்பு ஜல்லிக்கட்டு நடத்தும் தென் மாவட்ட கிராம மக்களிடம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு மனிதனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி என தடையை நீக்க மறுத்துவிட்டது. அதனால், ஜல்லிக்கட்டு நடக்கும் தென் மாவட்ட கிராமங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள் ளன.

உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம மக்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்போர், நேற்று காலை ஜல்லிக்கட்டு நடக் கும் திடலில் ஒன்று கூடி போராட் டத்தில் ஈடுபட்டனர். ஒரு புறம் ஆர்ப் பாட்டம், போராட்டம் நடந்தாலும், மற்றொரு புறம் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை, அதனை வளர்ப்போர் பயிற்சி கொடுத்து தயார் செய்து வருகின்றனர். அவர்கள் கூறியது:

ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் அலங்காநல்லூர் கோவிந்தராஜ்(55):

எந்த பிரச்சினையும் இல்லாம ஜல்லிக்கட்டு நடந்த போது, 3 மாடுகள் வளர்த்தேன். ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு 500 ரூபாய்க்கு தீவனம் போட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு இல்லை என்று ஆகிவிட்டது. மாடுகளுக்கு சும்மா தீனி போட்டு பராமரிக்க முடியாது என்பதால், 2 மாடுகளை விற்றுவிட்டேன். முன்பு ஒரு முறை, இதுபோல் பிரச்சினை வந்தபோது பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அந்த நப்பாசையில் ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்புகிறோம் என்றார்.

அலங்காநல்லூர் மாடுபிடி வீரர் கார்த்திக்(23):

விவரம் தெரிந்த நாள் முதல் மாடுபிடிக்க செல்கிறேன். தங்கம், வெள்ளி, அண்டா, குண்டா, பீரோ, மிக்சி என கணக்கிலடங்கா பரிசுகளை வீட்டுல குவிச்சி வச்சிருக்கேன்.

கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக் கட்டு நடக்காம பொங்கல் எங்க ளுக்கு துக்கப் பண்டிகையாகி விட்டது. இந்த முறை நடத்து வாங்க என மற்றவங்களை எதிர் பார்க்கிறதை விட்டுட்டு நாங்களே நடத்த தயாராகி வருகிறோம் என்றார்.

அலங்காநல்லூரைச் சேர்ந்த கெங்கம்மாள்(60):

எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்திலே இருந்தே எங்க ஊருல ஜல்லிக்கட்டு நடக் கிறது. நிறையபேர் மாடு குத்துப்பட்டு பயங்கரமாக காயப்படுவார்கள். சண்டை ஏற்படும். இப்படி பிரச்சினை இருந்த காலத்துலகூட ஜல்லிக்கட்ட நிறுத்தல. இப்போது நெட்டுக்கு கம்புகளை கட்டிவிட்டு மக்கள் தனியாக நின்னுதான் ஜல்லிக்கட்டைப் பார்க்கிறார்கள். யாருக்கும் எந்த சேதாரமும் இல்ல. இதில் எந்த தவறும் இல்லை. ஜல்லிக்கட்டு தடைவிதித்து நம்ம ஊரின் வீரம், பெருமையை மறைத்துவிட்டார்கள் என்றார்.

பாரம்பரியத்தை அழிக்க சதி

மண் பானை வியாபாரி சிவா(35), ‘‘ஒரு காலத்தில் நானும் மாடு பிடி வீரராக இருந்தவன்தான். மாட்டு வண்டியில் மணல் அள்ளக்கூடாது என்றதால், மாட்டு வண்டியே காணாமல் போய்விட்டது. இப்போது ஜல்லிக்கட்டை தடை விதித்து நாட்டு மாடு இனத்தையே அழிக்கின்றனர். இப்படி நம்முடைய ஒவ்வொரு பாரம்பரிய அடையாளங்களையும் தொலைத்து வருகிறோம். தமிழர்கள் மாடுகளை தங்களுடைய சொந்த பிள்ளைகளைபோல் வளர்கிறார்கள். அவற்றை போய் கொடுமைப்படுத்துவார்களா. இதெல்லாம் தமிழர்களுடைய பாரம்பரியத்தை அழிக்கிற சதி’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x