Published : 26 Sep 2022 04:10 AM
Last Updated : 26 Sep 2022 04:10 AM
பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவையில் தற்போது நிலவிவரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, காவல்துறையுடன் இணைந்து பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கோவையில் கடந்த 23-ம் தேதிமுதல் 4 கம்பெனி அதிவிரைவுப்படையினர் (ஆர்ஏஎஃப்), சிறப்புகாவல்படை, ஊர்காவல் படையினர் காவல்துறையுடன் இணைந்துபாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், வன்முறையை தூண்டும்வகையில், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துகடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் வகையில் இருந்தாலோ, சந்தேகிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஏதேனும் நபர்கள் ஈடுபட்டாலோ, உடனடியாக காவல்துறையின் கட்டுப்பாட்டு எண்கள் 100, 0422-2300970 மற்றும் 8190000100, 9498101165 என்ற வாட்ஸ் அப் எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT