Published : 26 Sep 2022 06:54 AM
Last Updated : 26 Sep 2022 06:54 AM

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் நினைவு தினம் குடும்பத்தினர் அஞ்சலி: இன்னிசை கச்சேரி நடத்தி ரசிகர்கள் மரியாதை

திருவள்ளூர்: மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டு வளாகத்தில் சிவலிங்கம் வடிவிலான, அவருடைய நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அவரது மனைவி சாவித்திரி, மகள் பல்லவி, சகோதரி சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, எஸ்பிபி-யின் நினைவிடத்தில் வரையப்பட்டுள்ள அவரின் உருவத்தை தொட்டு வணங்கி சாவித்திரி கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அங்கு மரக்கன்றுகளை நட்டார்.

மேலும் ட்ரம்ஸ் சிவமணி, இசையமைப்பாளர் தீனா மற்றும் பின்னணி பாடகர்கள், தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் சாந்தி ராஜு, எஸ்பிபி-யின் நினைவிடத்தில் முழங்காலிட்டு தவழ்ந்து சென்று, மரியாதை செலுத்தினார்.

இன்னிசைக் கச்சேரி: மேலும், அவரது நினைவைப் போற்றும் வகையில், அவருடைய நினைவிடத்தில் நடந்த இன்னிசைக் கச்சேரியில், எஸ்.பி. சைலஜா உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பாடினர். நினைவிடத்துக்கு வந்த அனைவருக்கும் எஸ்.பி.பி. அறக்கட்டளையினர் மரக்கன்றுகள் அளித்தனர். இதனிடையே மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் மற்றும் சென்னையில் சிலை அமைக்க வேண்டும். அவர் வசித்த தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும், மத்திய அரசு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x