Published : 26 Sep 2022 07:02 AM
Last Updated : 26 Sep 2022 07:02 AM
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக முதல்வர் தலையிடக் கோரி 500 அரசு மருத்துவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், அனைத்து அரசுமருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பதாகைகளை ஏந்தியபடி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். அப்போது, அரசு மருத்துவர்கள் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர் விதிகளுக்கு புறம்பான வகையில் மருத்துவர்களின் பணி நேரத்தை நீடிக்கும் விதமாக உள்ள அரசாணை எண் 225-ஐ திரும்பப் பெற வேண்டும்.
மருத்துவர்கள் சேமநல நிதிதிட்டத்தில் சேர்ந்துள்ள பயனாளிகளுக்கு சேமநல நிதி உடனேவழங்க வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளரை பலமுறை சந்தித்தும் எங்களுடையகோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தமிழக முதல்வர் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT