Published : 26 Sep 2022 07:12 AM
Last Updated : 26 Sep 2022 07:12 AM

சென்னையில் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

இதில் கலந்துகொண்ட பக்தர்கள்.படங்கள்: பு.க.பிரவீன்

சென்னை

ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஹிந்து தர்மார்த்த சமிதி தமிழக பக்தர்களின் சார்பில், திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு, பிரம்மோற்சவ காலத்தில் 11 அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழா, 'திருமலை திருப்பதிதிருக்குடை உபய உற்சவ ஊர்வலம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் நேற்று தொடங்கியது.

இவ்விழாவின் போது காலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர்கிரிஜா சேஷாத்ரி திருக்குடைகளை வரவேற்றார். விசாகா ஸ்ரீசாரதா பீடம் உத்தர பீடாதிபதி  ஸ்வாத்மானந்தேந்த்ர சரஸ்வதிசுவாமி திருக்குடை ஊர்வலத்தை மதியம் 12 மணி அளவில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிறுவனரும், ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்
சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் நேற்று தொடங்கியது.
ஸ்வாத்மானந்தேந்த்ர சரஸ்வதி சுவாமிகள், ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை
நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி,
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்குழு சிறப்பு அழைப்பாளர் சேகர் ரெட்டி,
விசுவ இந்து வித்யா கேந்திராபொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்ரி பங்கேற்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளர் சேகர் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சென்ன கேசவ பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்ட திருக்குடைகள் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருக்குடைகள் ஊர்வலம், என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாகச்சென்றது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் திருக்குடைகளை தரிசித்தனர். திருக்குடைகள் மீது பூக்களை தூவி தங்கள் பிரார்த்தனைகளை பக்தர்கள் செலுத்தினர்.

மாலை 6 மணி அளவில் வால்டாக்ஸ் சாலை, யானைக்கவுனி, பேசின் பாலம் வழியாகச் சென்றுசெயின்ட் தாமஸ் சாலை, சூளைநெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டோன்ஸ் சாலை, ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் சென்று, காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற திருக்குடைகள், இரவு அங்கு தங்கின. இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்புப் பூஜையுடன் இன்று காலை திருக்குடைகள் புறப்படுகின்றன.

மேடவாக்கம் குளச்சாலை, பாலசுப்பிரமணியர் கோயில், சன்னியாசிபுரம் ராதாகிருஷ்ணர் கோயில், வி.பி. காலனி 2-வது தெரு, வெள்ளையம்மன் கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில், சோமசுந்தரம் 2-வது தெரு, வெற்றி விநாயகர் கோயில், கன்னிமூல கணபதி கோயில் வழியாகச் சென்று வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோயிலில் இரவு திருக்குடைகள் தங்குகின்றன. இதையடுத்து 27-ம் தேதி திருமுல்லைவாயல் வெங்கடேஸ்வரா கோயிலிலும், 28-ம் தேதி திருவள்ளூரிலும், 29-ம் தேதி திருச்சானூரிலும் இரவு தங்குகின்றன. பின்னர் 30-ம் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x