Published : 26 Sep 2022 07:25 AM
Last Updated : 26 Sep 2022 07:25 AM

திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் நிர்வாகிகளின் மனுக்கள் இன்று பரிசீலனை: அண்ணா அறிவாலயத்தில் தென்காசி தொண்டர்கள் போராட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கு அமைச்சர் எ.வ.வேலு உட்பட பலரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுக்களை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். உடன் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர். படங்கள்: ம.பிரபு

சென்னை: திமுக மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்றும்,நாளையும் மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. திமுகவில் அமைப்பு ரீதியிலான 15-வது உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மிக முக்கியமான மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர் உள்ளிட்டமாவட்ட நிர்வாக பதவிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இறுதி நாளானநேற்று, வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை), வேலூர் மத்தி, மேற்கு(திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, மத்தி, சென்னை வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு ஆகிய16 மாவட்டங்களுக்கு போட்டியிடுவோர் மனுக்களை வழங்கினர்.

சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு அமைச்சர் சேகர்பாபு, தெற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு மயிலை வேலு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, வேலூர் கிழக்குக்கு அமைச்சர் ஆர்.காந்தி, காஞ்சிபுரம் வடக்குக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்குக்கு க.சுந்தர் ஆகியோர் மனுக்களை வழங்கினர். மனுக்களை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன். துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

ஏற்கெனவே, தேனி, கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டிவேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர். இவர்களிடம் கடந்த சில தினங்களாக கட்சியின் தலைமை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேபோலசென்னையிலும் நிர்வாகிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மேற்கு மாவட்டத்துக்கு போட்டியிடும் சிற்றரசுவை எதிர்த்து, பகுதிச் செயலாளர்மதன்மோகன், மா.பா.அன்புதுரை,முன்னாள் பகுதிச் செயலாளர் அகஸ்டின் பாபு ஆகியோர் மனுஅளித்துள்ளனர். அதேபோல, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணாவை எதிர்த்து சட்டப்பேரவை உறுப்பினர்ஆர்.டி.சேகர் மனு அளித்துள்ளார். எனவே, சென்னையிலும் 2 பகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக செல்லதுரையே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி,
சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள்.

மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்றும், நாளையும் திமுக அலுவலகத்தில் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. திமுக தலைமையை பொறுத்தவரை, அமைச்சர்கள் மற்றும் ஒருசில பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவிர 72 மாவட்டங்களில் 20 சதவீத உறுப்பினர்களை மாற்றுவதற்கு ஏற்கெனவே தலைமை முடிவெடுத்துள்ளது. அதன்படி, சில பகுதிகளில் புதியநிர்வாகிகளே களத்தில் உள்ளனர். போட்டி உள்ள பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை போட்டியிடுவோர் ஒப்புக்கொள்ளாத நிலையில்தேர்தல் நடைபெறலாம் இல்லாவிட்டால் வரும் 30-ம் தேதிக்குள் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

தென்காசி நிர்வாகிகள் போராட்டம்: தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரை மற்றும் அத்தொகுதி எம்.பி. தனுஷ்குமார் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தனர். இதில்தனுஷ்குமாரை தேர்வு செய்யகட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்டதிமுகவினர், நேற்று அறிவாலயத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். செல்லதுரையைதான் மாவட்டச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். அவர்களுடன் தலைமை நிலையச்செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x