Published : 16 Nov 2016 07:31 PM
Last Updated : 16 Nov 2016 07:31 PM
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாளை 17-ம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த தொகுதியில் வெற்றியை தாண்டி தங்கள் செல்வாக்கை நிரூபித்து பதவியை தக்க வைப்பதிலும், பதவிகளை பெறுவதிலும் திமுக, அதிமுக நிர்வாகிகளிடையே திரை மறைவு உள்கட்சி அரசியல் போட்டி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. 17-ம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் ஸ்டாலின், விஜயகாந்த்தை தவிர முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில் லை. மக்கள் நலக்கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக போட்டியிடவில்லை.
கடந்த கால் நூற்றாண்டாக தமிழக அரசியலும், தேர்தல்களும் ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் மையப் படுத்தியே இருந்து வருகிறது. அதனால், தமிழகத்தில் நடக்கும் எல்லா இடைத்தேர்தல்கள், பொதுத்தேர்தல்களில் அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதா, திமுகவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி பிரச்சாரம் அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். பொதுமக்களிடமும் இருவரின் பிரச்சாரமும் பெரிதாக பேசப்பட்டு, தேர்தலில் ‘திடீர்’ மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால், திருப்பரங்குன்றம், அரவகுறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களில் இந்த முறை உடல்நலக்குறைவால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் பிரச்சாரத்துக்கு வரவில்லை. அதனால், இரு கட்சித் தொண் டர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
திமுகவில் ஸ்டாலின் 2 நாள் பிரச்சாரத்துக்கு வந்து, திருப்பரங்குன்றத்தில் ஒருநாள் தங்கி கருணாநிதி வராத ஏமாற் றத்தை ஓரளவு குறைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தேர்தல் வேகத்தை ஏற்படுத்தினார். ஜெயலலிதாவும் தன் பங்குக்கு அறிக்கை விட்டு அக்கட்சித் தொண்டர்களிடம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இரு கட்சி நிர்வாகிகளிடம் வெற்றிக்கான திட்டங்களை தாண்டி, கட்சியில் செல்வாக்கை அதிகரிக்க, பதவிகளை தக்க வைப்பதற்கான அரசியல் போட்டியும் இருப்பதாக கூறப்படுகிறது. திமுவில் வெற்றியை தாண்டி, அக்கட்சி நிர்வாகிகள் தாங்கள் பொறுப் பாளராக இருக்கும் ‘பூத்’களில் அதிமுகவை காட்டிலும் கூடுதல் வாக்குகள் அல்லது கவுரவமான வாக்குகளை பெற்றுக் காட்டுவதில் தீவிரமாக உள்ளனர்.
குறிப்பாக திண்டுக்கல், மதுரை திமுக நிர்வாகிகளிடையே திரைமறைவு போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இந்த தேர்தலில் வெற்றி பெற்று கொடுப்பது மட்டுமில்லாது, திமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வாரமாக இரவு, பகலாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அதனால், இரு கட்சிகளை சேர்ந்த வெளிமாவட்ட நிர்வாகிகள், திருப்பரங்குன்றத்தில் கடந்த 15 நாட்களாக வீடு எடுத்தும், ஹோட்டலில் அறை எடுத்து தங்கியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பக்கத்து மாவட்ட நிர்வாகிகள், கார்களில் தினமும் வந்து தேர்தல் பணியாற்றினர். தற்போது நாளை 17-ம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்வதால் வெளிமாவட்ட நிர்வாகி கள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆர்வத்தில் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதிமுகவில் முந்துவது யார்?
மதுரை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ வி.வி. ராஜன்செல்லப்பா ஆகியோருக்கு இடையோன அரசியல் போட்டி அக்கட்சித் தலைமை வரை அறிந்ததுதான். இந்த இடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி, ராஜன்செல்லப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் புறநகர் மாவட்டத்துக்குட்பட்டது. அதனால், அரவகுறிச்சி, தஞ்சாவூரை காட்டிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து, திமுக-வை டெபாசிட் இழக்க வைத்தால் அமைச்சராகலாம் என்ற நினைப்பில் ராஜன் செல்லப்பா, தேர்தல் பணிபுரிவதாக கூறப்படுகிறது. அதனால், அவர், தான் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் 61, 62 வார்டு ‘பூத்’ கள் மட்டுமின்றி தொகுதிக்குட்பட்ட எல்லா ‘பூத்’களுக்கும் சென்று தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளார்.
அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தாங்கள் பொறுப்பாளராக உள்ள ‘பூத்’களில் எல்லோரை காட்டிலும் கூடுதல் வாக்குகளை பெற்று காட்டியாக வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT