Published : 13 Nov 2016 12:14 PM
Last Updated : 13 Nov 2016 12:14 PM
முதலாம் ராஜேந்திர சோழன் வடஇந்தியாவில் கங்கை வரை போர் தொடுத்து வெற்றி பெற்றதற்கு ஆதாரமாக விளங்கிய திருலோக்கி கல்வெட்டுகள், கோயில் கும்பாபிஷேகத்தின்போது வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளதால் வரலாற்று ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தனது தந்தை ராஜராஜ சோழன் போன்று முதலாம் ராஜேந்திர சோழனும் சிறந்த ஆட்சி நிர்வாகம் புரிந்ததுடன், தன்னுடைய படை பலத்தின் மூலம் பல சிற்றரசர்களை வென்று தனது பேரரசை விரிவுபடுத்தினார். அதன்படி, கி.பி.1012-1044-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை போரில் வெற்றி பெற்று, கங்கை நதிநீரைக் கொண்டுவந்து, முதலில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஏமநல்லூர் என்று அழைக்கப்பட்ட திருலோக்கி என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு வந்து அங்கு உள்ள இறைவனை வழிபட்டுள்ளார்.
அதன் பின்னரே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ள சோழபுரத்துக்குச் சென்று அங்கு அழகிய சிவன் கோயிலை எழுப்பி, அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஆதாரமாக திரு லோக்கி கைலாசநாதர் கோயிலில் கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் கங்கை கொண்ட சோழபுரத்தின் வரலாறு உலகுக்குத் தெரியவந்தது.
போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கல்வெட்டு கள், அண்மையில் நடைபெற்ற இக்கோயில் கும்பாபிஷேகத் தின்போது முழுவதும் வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று ஆர்வலர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆர்வலர் கோமன் கூறியபோது, “முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட வெற்றி குறித்து வரலாற்றை நாம் அறிய திருலோக்கி கல்வெட்டுகளே ஆதாரமாக இருந்தன. இந்த கல்வெட்டுகள் பாதுகாக்கப்படாமல் இருந்ததால், அவை கும்பாபிஷேகத்தின்போது வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளன.
திருலோக்கி கைலாசநாதர் கோயிலில் 1932-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இந்த கல்வெட்டுகளை படி எடுத்துள்ளனர். ஆனால், அவை வெளியிடப்படவில்லை. அதன்பிறகு எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்கள் அந்த கல்வெட்டுகளை படி எடுத்துள்ளனர். இருந்தாலும் கோயிலில் இருந்த கல்வெட்டு பாதுகாக்கப்படாமல் அழிக்கப்பட் டுள்ளது வேதனையைத் தருகிறது.
இதுபோன்ற பல கோயில்களிலும் கும்பாபிஷேகத் தின்போது கல்வெட்டுகள் சிதைக்கப்படுகின்றன. இதனைப் பாதுகாக்க அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் முன்வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் கஜேந்திரனிடம் கேட்டபோது, “திருலோக்கி கோயி லில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு உள்ள கல்வெட்டுகள் மீது வர்ணம் பூசப்பட்ட தகவல் தற்போதுதான் தெரியவருகிறது. உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.
இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, “திருலோக்கி கைலாசநாதர் கோயில் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்தான் உள் ளது. தொல்லியல் துறைக்கும் அக்கோயிலுக்கும் எவ்விதத் தொடர்பு இல்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT