Published : 25 Sep 2022 06:57 PM
Last Updated : 25 Sep 2022 06:57 PM
கோவை: வன்முறை மூலமாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டுமென திமுக நினைத்தால் நான் எதுவும் செய்ய முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று (செப்.25) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும், ஆ.ராசா சொன்ன கருத்துக்கு தமிழக காவல்துறை இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், ஆ.ராசா கூறியதை எதிர்த்துப் பேசிய கோவை பாஜக மாநகர், மாவட்ட தலைவர், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையில் தவறாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொருவெர் மீதும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன். பாஜக தொண்டர்கள் மீது கைவைத்த எந்த போலீஸாரும் தப்பிக்க முடியாது. இந்த ஆட்சி இன்னும் வேண்டுமானால் 3 ஆண்டுகள் நீடிக்கும். அதன்பிறகு, திமுக என்பது மண்ணோடு மண்ணாக போய்விடும். அதன்பிறகு, காவல்துறையினர் என்ன செய்வார்கள்?
முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தொண்டர்களை கைது செய்துள்ளனர். நானே ஸ்டாலினை எதிர்த்து போஸ்டர் ஒட்டுகிறேன். என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம். போஸ்டர் ஒட்டுவது தவறா. ஸ்டாலின் என்ன கடவுளா. மூன்று வேளையும் பூஜை செய்து, அலங்காரம் செய்து, அவருக்கு மாலையிட வேண்டுமா. கோவையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் காவல்துறைதான். காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. எந்த ஒரு பதவியும் நிரந்தரம் அல்ல.
ஆனால், அரசியல் கட்சி இருக்கும். அதை காவல்துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.சி., எஸ்.டி., நண்பர்கள் அரசியலில் இருந்தால், அவர்களுக்கு எதிராக கருத்தே சொல்லக்கூடாதா? மத்திய அரசு இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் என நினைக்கிறீர்களா. எங்களுக்கும் அகில இந்திய தலைவர்கள் உள்ளனர். மம்தா பானர்ஜி-க்கு இன்று என்ன நிலை என்று பாருங்கள்.
வன்முறை மூலமாக பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று திமுகவும், அதை சார்ந்த இயக்கங்களும் திட்டமிட்டால், என்னால் எதுவும் செய்ய முடியாது. காவல்துறை மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், கோவை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் நிச்சயம் ஏற்புடையது அல்ல. பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்துக்கொண்டே இருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா. தீவிரவாத கொள்கை மூலம் ஒரு இயக்கம் வளர வேண்டும் என்று நினைத்தால், அந்த இயக்கத்துக்கு தமிழகத்தில் இடம் இல்லை. யாரெல்லாம் தவறு செய்ய வாய்ப்புள்ளதோ அவர்கள் மீது முன்கூட்டியே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள பாஜக மாநகர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியின் வீட்டுக்கு சென்ற அண்ணாமலை அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT