Published : 25 Sep 2022 03:48 PM
Last Updated : 25 Sep 2022 03:48 PM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து 46 குழந்தைகள் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலில் 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பன்றிக் காய்ச்சலால் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 46 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இதனால் கல்வித்துறை புதுவை, காரைக்காலில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுவை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்றும் அதிகளவு கூட்டம் இருந்தது. ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுடன் பெற்றோர் குவிந்திருந்தனர். காய்ச்சல் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல் அரசு ஆஸ்பத்திரியில் வயதானவர்கள் பலரும் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இதேபோல அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது. காய்ச்சிய குடிநீரை பருகும்படியும், முககவசம் அணியும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலுவிடம் கேட்டதற்கு, "புதுவை அரசு மருத்துக்கல்லூரியில் 59, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் 378, காரைக்காலில் 36 பேர் என 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர். இன்று அரசு மருத்துவமனையில் 3, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 34, காரைக்காலில் 9 பேர் என 46 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தமாக 188 குழந்தைகள் உள்நோயாளிகளாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
மொத்தமாக 15 பேருக்கு பன்றி காய்ச்சல்
புதுச்சேரி காரைக்காலில் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக 7 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 108 பேருக்கு பரிசோதித்ததில் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியாகி அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் இருவர் குழந்தைகள். இதனால் புதுச்சேரி, காரைக்காலில் 15 பேருக்கு பன்றிக் காய்ச்சலுடன் சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT