Published : 11 Nov 2016 12:26 PM
Last Updated : 11 Nov 2016 12:26 PM
கோயில் நகரமான கும்பகோணத்தில் சாம்பசிவராவ் பழைய பேருந்து நிலையம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இடநெருக்கடி காரணமாக கிழக்குப் பகுதியில் கடந்த 1990-ல் அறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்துக்கான நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கும்பகோணத்திலிருந்து வெளியூர்களுக்குச் சென்று பணியாற்றுவோரின் வசதிக்காகவும், வெளியூர்களிலிருந்து கும்பகோணம் வந்து பணியாற்றுவோரின் வசதிக்காகவும், கும்பகோணம் நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் சுமார் 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பகம் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டதால் நகராட்சிக்கு சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வருமானம் கிடைத்து வந்தது.
ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் இரு சக்கர வாகன பாதுகாப்பு இடத்தில் மேற்கூரை அமைத்து வாகனங்களை இரவு பகலாகப் பாதுகாத்தனர். இதற்காக 24 மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணமாக பெற்று வந்தனர்.
இந்நிலையில், தனியாரிடம் விடப்பட்ட டெண்டரை கடந்த 2014-ல் நகராட்சி நிர்வாகம் ரத்து செய்து, அதற்கான தீர்மானத்துக்கு நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
பின்னர், அந்த இடத்தில் பல்நோக்கு அடுக்குமாடி வாகன பாதுகாப்பிடம் கட்டப்போவதாக வரைபடம் தயாரித்து சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்துக்கு அனுப்பியது. அதற்கான பதில் இதுவரை சென்னையிலிருந்து வரவில்லை.
இதற்கிடையில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதால், இருசக்கர வாகன பாதுகாப்பு இடத்தைக் காலிசெய்யுமாறு ஒப்பந்ததாரருக்கு 2014-ல் நோட்டீஸ் வழங்கியது நகராட்சி நிர்வாகம். அதன்படி, ஒப்பந்ததாரர் இடத்தைக் காலிசெய்துவிட்ட நிலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, அப்போதைய நகர்மன்றத் தலைவருக்கு புகார்கள் சென்றதையடுத்து, அங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரமுள்ள சாம்பசிவராவ் பழைய பேருந்து நிலையத்தில் காலியாக இருந்த பகுதியில் இரு சக்கர வாகன பாதுகாப்பிடம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு 1 கிலோமீட்டர் தூரம் நடந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் வாகன பாதுகாப்பிடம் ரத்து செய்யப்பட்டதும், பேருந்து நிலையம் அருகே இருந்த காலியிடங்களில் தனியார் வாகன பாதுகாப்பிடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், 24 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரத்துக்கு கட்டணத்தை வசூலித்தனர்.
பொதுமக்கள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணத்தைக் கொடுத்து அவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர்.
தனியார் வாகன பாதுகாப்பு இடம் அமைக்க நகராட்சியில் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை அப்படி யாரும் அனுமதி பெற்றதாக தகவல்கள் இல்லை.
இதற்கிடையில், பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் வாகன நிறுத்தம் தொடங்கப்பட்டும், அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வராத நிலையிலும், நகராட்சி அனுமதி பெறாமல் வாகன பாதுகாப்பிடம் அமைத்த தனியார் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.
புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி நிர்வாகத்தில் பாதுகாக்கப்பட்ட வாகன நிறுத்தத்துக்கான இடத்தில் இன்றுவரை அடுக்குமாடி வாகன பாதுகாப்பு கட்டிடம் கட்டப்படவில்லை.
இதற்கிடையில், அந்த இடத்தில் ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதற்காக நகராட்சியிடம் வாய்மொழியாக மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடரும் வருவாய் இழப்பு
கும்பகோணம் பொற்றாமரைக் குளம் அருகே இருந்த மூர்த்தி கலையரங்கம் 2003-ல் இடிக்கப்பட்டும், இதுவரை அங்கு புதிய கலையரங்கம் கட்டப்படாமல் காலியிடமாகவே உள்ளது. அதேபோல கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட நகராட்சி தங்கும் விடுதி கட்டிடம், விரிசல் ஏற்பட்டதால் 2011-ல் இடிக்கப்பட்டது.
இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விடுதியின் தரைத்தளத்தில் இயங்கி வந்த வணிக நிறுவனங்களுக்கு மாற்று இடமாக உழவர் சந்தை எதிரே மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியின் அருகில் சுமார் 50 கடைகள் கட்டும் பணி மந்த நிலையில் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகே சைக்கிள் நிறுத்தமும் அகற்றப்பட்டுள்ளது. கும்பகோணம் நகராட்சிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் தரக்கூடிய இவையெல்லாம் அகற்றப்பட்டு, வருவாய் இல்லாத நிலையில், மாற்று ஏற்பாடாக தொழில் வரி, குடிநீர் வரி, வீட்டு வரியாக அதிக தொகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கும்பகோணம் நகராட்சியின் மூத்த பொறியாளர் ராஜகோபாலிடம் கேட்டபோது,
“புதிய பேருந்து நிலையம் அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வடிமைத்துத் தர தனியார் நிறுவனத்துக்கு அரசு உத்தரவு வழங்கப்பட்டது. எனினும், அந்த இடத்தில் பணிகள் தொடங்க சிலகாலம் ஆகலாம். நகராட்சி வாகன நிறுத்தம் குறித்து நகராட்சி ஆணையர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி யிடம் விவரம் கேட்க நேரிலும், தொலைபேசியிலும் பலமுறை முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே பூட்டி வைக்கப்பட்டுள்ள நகராட்சி சைக்கிள் நிறுத்துமிடம். (அடுத்த படம்) புதிய பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு மாற்றுப்பாதையில் விடப்பட்டுள்ள நகராட்சி சைக்கிள் நிறுத்துமிடம்.
பழைய பேருந்து நிலையத்தில் தங்கும் விடுதி இடிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் தொடங்காமல் உள்ள இடம்.
மக்களைத் திரட்டி போராட்டம்…
இதுகுறித்து கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கூறியபோது,
“கும்பகோணம் நகராட்சி சார்பில் ஒப்பந்த முறையில் வாகன பாதுகாப்பு நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு இரு ஆண்டுகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. ஆனால், அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் அந்த திட்டம் இதுவரை அமல்படுத்தப் படவில்லை. புதிய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லை. மேலும், நகராட்சி இடம் தனியார் துணிக்கடைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நவடிக்கை எடுக்காவிட்டால், மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.
இதுகுறித்து வலங்கைமானைச் சேர்ந்த வினோத்குமார் கூறியபோது,
“நான் வாரத்தில் 3 நாட்கள் வெளியூர் செல்வேன்.
என்னுடைய இரு சக்கர வாகனத்தை நகராட்சி பாதுகாப்பு நிறுத்தத்தில் நிறுத்தி சென்றுவந்தேன்.
தற்போது நகராட்சி நிறுத்தம் இல்லாததால், தனியாரிடம் கூடுதல் கட்டணம் கொடுத்து பொதுமக்கள் அனைவரும் வாகனத்தை நிறுத்த வேண்டியுள்ளது” என்றார்.
காவிரி டெல்டா நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் பட்டீஸ்வரம் பஞ்சாபிகேசன் கூறியபோது,
“கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சி வாகன நிறுத்துமிடம் செயல்படாததால், தனியார் வாகன நிறுத்தத்துக்கு செல்ல வேண்டியுள் ளது.
அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆனால், போதிய பாதுகாப்பு இல்லை. தனியாருக்கு கொடுத்த இடத்தில் நகராட்சி மீண்டும் வாகன நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT