Published : 25 Sep 2022 12:12 AM
Last Updated : 25 Sep 2022 12:12 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மனுதர்மம் எதிர்ப்பு போராட்டத்தின்போது பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே மத்திய அரசைக் கண்டித்து, பெரியாரிய-அம்பேத்கரிய இயக்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேபோல் ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி சார்பிலும் 27-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்த் போராட்டம் தொடர்பாக, புதுச்சேரி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம், புதுச்சேரி தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி, இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், மதிமுக அமைப்பாளர் கேப்ரியல், விசிக முதன்மை செயலர் தேவ.பொழிலன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், புதுச்சேரி மாநில அரசியல் நிலவரம் குறித்தும், போராட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் தேவையில்லை என கருத்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, திமுக அமைப்பாளர் சிவா கூறியதாவது: ‘‘புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஜனநாயக விதிமீறல் தொடர்ந்துள்ளது. மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியுள்ளது என்று கடந்த 50 ஆண்டுகளாக பலர் விமர்சித்துப் பேசி வருகின்றனர். ஒரு தபாலை எழுதியவர் மீது கோபப்படாமல், அந்த தபாலை படித்தவர் மீது கோபப்படும் விதத்தில் ஆ.ராசாவை விமர்சிப்பது சரியல்ல.
ஒரு கருத்தை எதிர்க்கவும், கண்டிக்கவும் ஜனநாயக நாட்டில் மற்றவர்களுக்கும் உரிமை உள்ளது. இங்கே அனுமதி பெற்று போராட்டம் நடத்தியவர்கள் மீது ஆளும் கட்சினர் துணையுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தை ஆளுநர், பாஜகவினர் தங்கள் சொத்தாக கருதுகின்றனர். புதுச்சேரியின் அமைதிக்கு எந்தவிதத்திலும் பங்கம் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், பொது மக்களையும், வியாபாரிகளையும் பாதிக்கக்கூடிய முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது என கருதுகிறோம்.
மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவும், திசை திருப்பவும் இதுபோன்ற முழு அடைப்பு போராட்டத்தை ஆளும் தரப்பு இந்து முன்னணி மூலம் அறிவிப்பதாகவே கருதுகிறோம். இந்து முன்னணி போராட்டமும் தேவையற்றது. பெரியார் இயக்கங்களின் போராட்டத்துக்கும் நாங்கள் ஆதரவு தரவில்லை. இதுதொடர்பாகவே, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT