Published : 24 Sep 2022 03:38 PM
Last Updated : 24 Sep 2022 03:38 PM
சென்னை: தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்குப் போடப்படும் நியுமோகோக்கல் காஞ்சுகேட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரங்களில் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்குப் போடப்படும் நியுமோகோக்கல் காஞ்சுகேட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிறந்த குழந்தைகளை நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாக்க நியுமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி, குழந்தைகளுக்கு 6-வது வாரம், 14-வது வாரம் மற்றும் 9-ம் மாதத்தில் இந்த தடுப்பூசியை போடவேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "இந்த தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் போடுவதன் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 10 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள். ஒரு குழந்தைக்கே மூன்று தவணை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், அதற்கேற்ற தடுப்பூசி தற்போது கைவசம் இல்லை. இதனால் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது" என்று அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழகத்திற்கு ஓர் ஆண்டிற்கு 30,53,000 தடுப்பூசிகள் தேவை. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழகத்தின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், மத்திய அரசு வெறும் 6,00,000 தடுப்பூசிகளை மட்டும்தான் தற்போது வரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் கோரிய தடுப்பூசி அளவில் பாதி அளவு கூட மத்திய அரசு கொடுக்கவில்லை" என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT