Published : 24 Sep 2022 01:39 PM
Last Updated : 24 Sep 2022 01:39 PM
சென்னை: 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் தமிழ்நாடு பசுமை இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை வண்டலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயத்தின் முக்கிய நோக்கங்களின் முழு விவரம்:
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.
நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களைக் கண்காணிக்க, பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக www.greentnmission.com என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத்திறன் (Survival Rate) போன்றவற்றை கண்காணிப்பதற்கு அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT