Published : 24 Sep 2022 11:31 AM
Last Updated : 24 Sep 2022 11:31 AM
சென்னை: எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான என்ஐஏ சோதனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், " அண்மைக் காலமாக மத்திய பாஜக அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவைகளின் மூலம் இஸ்லாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.
எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர்.
ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த அமைப்புக்கள் ஆரவாரமின்றி பணியாற்றிக்கொண்டு இருக்கின்றன.
இந்த அமைப்புக்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையும், நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானதாகவும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். இந்தப் போக்கினை மறுமலர்ச்சி தி.மு.க. கண்டிக்கிறது. அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT