Published : 24 Sep 2022 11:02 AM
Last Updated : 24 Sep 2022 11:02 AM

தமிழகத்தில் பரவும் காய்ச்சல்கள்; கள நிலவரத்திற்கேற்ப தடுப்பு நடவடிக்கை தேவை:  ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பரவிவரும் கரோனா, டெங்கு, ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த கள நிலவரத்திற்கேற்ப தகுந்த தடுப்பு நடவடிக்கை தேவை என்று அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாகப் பரவிவரும் ‘ஃப்ளூ’ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க அரசை வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால்,மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், கள நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது. ‘ஃப்ளூ’ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இருமடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் சொன்னாலும், அண்மைக்காலமாக காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை, குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தியுள்ளன. நேற்று 100 இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்ஃபுளுவென்சா எனப்படும் ‘ஃப்ளூ’ தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் ‘ஃப்ளூ’ காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.

கரோனா தொற்று அறிகுறிகளும், ‘ஃப்ளூ’, ‘டெங்கு’ காய்ச்சலுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், கடுமையான அறிகுறிகளுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும், வருங்காலங்களில் தற்போதுள்ள காய்ச்சல் முகாம்கள், நோய்த் தொற்று எங்குஅதிகமாக இருக்கிறதோ அங்கு மாற்றப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கள நிலைமை இவ்வாறிருக்க, அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அமைச்சர் கூறுவது வியப்பாக இருக்கிறது.

இதேபோன்று, ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருந்ததுபோல் தமிழ்நாட்டிலும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டாலும், மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண்ணை அரசு அறிமுகம் செய்திருப்பதாக கூறுகிறார். இதிலிருந்தே மருந்து தட்டுப்பாடு நிலவுவது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டு அளவிலும் சரி கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், செப்டம்பர் 29 அன்று 496 ஆக இருந்த தினசரி பாதிப்பு 21 ஆம் தேதி 509 ஆகவும், 22 ஆம் தேதி 522 ஆகவும், 23 ஆம் தேதி 529 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது தவிர, 23ஆம் தேதி இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணமும், யதார்த்தமான கள நிலவரத்திற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x