Published : 24 Sep 2022 06:18 AM
Last Updated : 24 Sep 2022 06:18 AM
தேனி: திண்டுக்கல் - குமுளி இருவழிச் சாலை வழித்தடத்தில், எஞ்சியுள்ள ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணி நிறைவடைந்ததும், சில மாதங்களில் இச்சாலை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் முதல் குமுளி வரை 133.7 கிமீ தூரத்தை இருவழிச் சாலையாக மாற்றும் பணி, 2010-ல் தொடங்கியது. இதற்காக ரூ.333.18 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல்-தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி-குமுளி என்று 2 கட்டங்களாக பணிகள் நடைபெற்றன.
இருப்பினும் நிலம் கையகப் படுத்துவதில் தாமதம், நீதிமன்ற வழக்கு, கரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் சாலை அமைக்கும் பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்தன. எண்டப்புளி எனும் இடத்தில் மட்டும் குடியிருப்புகள் இருந்ததால் சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அப்பகுதியிலும் தற்போது சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் புறவழிச் சாலையிலேயே வாக னங்கள் செல்லும் நிலை உருவாகி உள்ளது. இருப்பினும் தேனி பூதிப்புரம் அருகே வாழையாத்துப்பட்டி எனும் இடத்தில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால் அங்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் மூன்று மாதங்களில் முழுமையாக பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன்பிறகு இச்சாலை வாகன பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.
இருப்பினும் தற்போது தேனியைத் தவிர தேவதானப்பட்டி, பெரியகுளம், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் புறவழிச்சாலை வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. இத்திட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் கோட்டூர் அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலைத் துறையினர் கூறுகையில், தற்போது சாலை அமைக்கும் பணி வெகுவாக முடிவடைந்து விட்டது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மட்டும் நடைபெறுகிறது. சில மாதங்களில் இப்பணியும் நிறைவடையும். இதன் மூலம் தேனி மாவட்டத்தின் முக்கிய ஊர்களுக்கு புறவழிச்சாலை வசதி கிடைத்துள்ளதால் நகரில் நெரிசல் குறையும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT