Published : 14 Nov 2016 10:46 AM
Last Updated : 14 Nov 2016 10:46 AM

இயற்கைமுறை காய்கறிகளின் விற்பனைக்கு தனிக் கடை ஒதுக்கப்படுமா?- சிறு, குறு விவசாயிகள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் 60 லட்சத்து 32 ஆயிரத்து 718 ஹெக்டேரில் விவ சாயம் நடைபெறுகிறது. இதில், 52 லட்சத்து 43 ஆயிரத்து 839 ஹெக்டேரில் ஒருபோக சாகுபடியும், 7 லட்சத்து 88 ஆயிரத்து 879 ஹெக்டேரில் இருபோக சாகுபடியும் செய்யப்படுகிறது. இதில், 42 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே விவசாயிகள் இயற்கை முறையை கடைபிடிக்கின்றனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் 50 சதவீத காய்கறி, பழங்கள், மலர்கள் விற்பனை கேரளாவைச் சார்ந்தே இருக்கிறது. 2014-ம் ஆண்டு கேரள அரசு, வெளி மாநிலங்களில் இருந்து விற்ப னைக்கு வந்த காய்கறிகளை ஆய்வு செய்தபோது, தமிழக காய்கறிகளில் அளவுக்கு மீறிய நச்சுத்தன்மை இருப்பதாகத் தெரிவித்தது. தமிழக வேளாண் துறை, நச்சுத்தன்மை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித் தும் முன்புபோல் தமிழக காய் கறிகளுக்கு கேரளாவில் வரவேற்பு இல்லை.

கேரள அரசு, காய்கறி தேவையை சமாளிக்க 2015-ம் ஆண்டு புதிய வேளாண் கொள்கையை அறிவித்தது. வெளிமாநில காய்கறி கள் வரத்தைக் குறைத்து, அனைத்து மாவட்டங்களிலும் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கு சிறப்பு மானியங்கள் வழங்கி காய்கறி சந்தைகளில் 40 சதவீத கடைகளை இயற்கையில் விளைந்த விளைபொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கீடு செய்து சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இயற்கை வேளாண் பொருட்களின் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் ஆரோக்கியம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அரசே ஏற்படுத்துவதால் தற்போது இயற்கை காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசும் மானிய உதவியில் இடுபொருட்கள் வழங்கி இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், மக்களிடம் இயற்கை காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் இல்லாததாலும், அரசு நேரடி சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காததாலும் இயற்கை முறையில் விளைவித்த காய்கறி கள், பழங்களை விற்க முடியாமல் சிறு, குறு விவசாயிகள் தடுமாறு கின்றனர்.

இதுகுறித்து மதுரை கட்டையன்பட்டி தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பையா கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் தற்போது வெண்டை, சீனி அவரைக்காய், தக்காளி, முட்டைகோஸ், கத்தரிக் காய், தேங்காய் மற்றும் பழ வகைகள் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பரப்பு அதிகரித்துள்ளது. ஆனால், வெளிநாடுகள், அண்டை மாநிலங்களைப் போல சந்தைப் படுத்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்காததால் வியாபாரிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள், ரசாயன உரம் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கான விலையையே இயற்கை காய்கறிகள், பழங்க ளுக்கும் கேட்கின்றனர்.

ரசாயன உரத்தைக்கொண்டு விளைவிக்கும் காய்கறிகளை ஒப்பிடும்போது, இயற்கை முறை யில் மூன்றில் ஒரு பங்குதான் விளைச்சல் கிடைப்பதால், அவர்கள் கேட்கும் விலையில் விற்றால் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், பெரும் நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு இருக்கும் பெரு விவசாயி கள் மட்டுமே இயற்கை விவசாயத் தில் சாதித்து வருகின்றனர். சிறு, குறு இயற்கை விவசாயிகள், விளைவித்த பொருட்களைச் சந்தைப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சந்தைகள், உழவர் சந்தைகளில் இயற்கை காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு தனிக் கடைகள் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கினால் பொதுமக்களிடம் இயற்கை காய்கறிகள், பழங்க ளுக்கு வரவேற்பு கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x