Published : 23 Sep 2022 06:56 PM
Last Updated : 23 Sep 2022 06:56 PM
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவும் உள்ளதாக குறிப்பிட்டனர். இதையடுத்து பாஜக தரப்பினர் ஆளுநர் தமிழிசையிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வரிடம் பேசி தீர்வு காணுமாறு அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் வென்ற 6 சுயேச்சை எம்எல்ஏக்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 பேர் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்களில் அங்காளன் எம்எல்ஏ திருபுவனை தனி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். இந்நிலையில், இன்று காலை அங்காளன் எம்எல்ஏ பேரவை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அதையடுத்து காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ சட்டசபைக்கு காரில் வந்தார். அவர் சுயேச்சை எம்எல்ஏ அங்காளனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
போராட்டம் குறித்து சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் கூறுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. குடிநீர் வசதி பல இடங்களில் செய்துதர கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. வளர்ச்சிப் பணிகளுக்கு முதல்வர் ரங்கசாமி தடையாக உள்ளார். பாஜகவுக்கு ஆதரவு தருகிறேன் என்பதற்காக தொகுதியில் கோவில் கமிட்டி, பால் கூட்டுறவு கமிட்டி நியமனத்தில்கூட என் பரிந்துரைகளை கேட்கவில்லை. புதுவையில் பாஜக வளரக்கூடாது என அவர் நினைக்கிறார். முதல்வரை கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளேன். ரங்கசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், புதுவையில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்.
இ-டெண்டர் முறை இருக்கும்போது, வெளிப்படைதன்மை இல்லாமல் 6 மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கியுள்ளனர். மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து பாஜக கட்சி தலைவர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். முதல்வரை நீக்கி புதுவையில் பாஜக ஆட்சி வர வேண்டும்" என்று அங்காளன் கூறினார்.
காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் கூறுகையில், "பிரதமர், உள்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் எம்எல்ஏக்கள் கையெழுத்து போட்டு முதல்வராக ரங்கசாமியை தேர்வு செய்தோம். ஒன்றரை ஆண்டுக்குள் நம்பிக்கைக்கு துரோகமாக ரங்கசாமி செயல்படுவது அநீதியாக உள்ளது. இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல்வர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைதான் எழும். கட்சி பாகுபாடின்றி எல்லா எம்எல்ஏக்களும் ஒன்றிணைவோம். ஆறு மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் சந்தேகம் உள்ளது. கள்ளுக்கடை, வாகன உரிம எண்ணுக்கே இடெண்டர் விடப்படுகிறது. ஆனால் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியது எப்படி?" என்றார்.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி சட்டசபைக்கு வந்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்த மருத்துவ மாணவர்களின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்திய படிக்கட்டுகளின் வழியாக தனது அலுவலகத்துக்கு முதல்வர் ரங்கசாமி சென்றார். அவரை பத்திரிகையாளர்கள் சந்திக்க சென்றபோது காலை உணவு சாப்பிடுகிறார் என்றனர். சிறிது நேரத்திலேயே காரில் ஏறி சென்றார்.
இதனிடையே, பேரவைத்தலைவர் செல்வம் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அவர் சுயேச்சை எம்எல்ஏ அங்காளனை அழைத்து பேசினார். அப்போது அங்காளன் தனது தொகுதியில் பரிந்துரை இல்லாமல் போடப்பட்ட அனைத்து கமிட்டிகளையும் கலைக்க வேண்டும். புதிதாக தனது பரிந்துரையின்படி கமிட்டிகளை போட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு ஆளுநர், முதல்வரிடம் பேசுவதாக பேரவைத் தலைவர் தெரிவித்தார். அதுவரை போராட்டம் நடத்துவதாக அங்காளன் குறிப்பிட்டு பேரவை படிக்கட்டில் வந்து அமர்ந்தார்.
தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவை பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சிவாயம், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆகியோர் பேரவைத்தலைவர் அறைக்கு மீண்டும் அழைத்து பேசினர். பின்னர் அனைவரும் சேர்ந்து அங்காளனை துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஆளுநருடன் சந்திப்பு நடந்தது. பின்னர் அங்கிருந்து வந்தவுடன் அங்காளனின் உண்ணாவிரதத்தை பேரவைத்தலைவர் செல்வம் இன்று மாலை முடித்து வைத்தார்.
அதையடுத்து அங்காளன் எம்எல்ஏ கூறுகையில், "முதல்வர் ரங்கசாமி செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை முதல்வரிடம் பேசி தீர்க்குமாறு அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தெரிவிப்போம். முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமியை விலக்கக் கோரி புகார் தரவும் உள்ளோம். இதே நிலைப்பாட்டில்தான் பெரும்பாலான எம்எல்ஏக்கள் உள்ளனர்" என்றும் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...