Published : 23 Sep 2022 06:42 PM
Last Updated : 23 Sep 2022 06:42 PM
சென்னை: சென்னையில் ஜனவரி வரை புதிய சாலைகள் அமைக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் நிர்வாகத்தின் கீழ் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த அதீத கனமழையால் 1,000-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதிக்குள் பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மழைநீர் வடிகால் பணிகளை அக்டோபர் 20-ம் தேதிக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பணிகள் முழுமை அடையாத இடங்களில், மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டிருப்பதுடன், மின் மோட்டார்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், பருவமழை துவங்குவதால், புதிய சாலை மற்றும் சாலை சீரமைக்கும் பணிகள் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மின்சார வாரியம் சார்பில் புதைவட கேபிள் மாற்றும் பணி, குடிநீர் வாரிய பணிகள் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும். ஆனால், பருவமழைக்கு முன், பணிகளை நிறுத்தி, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சாலை சீரமைத்தால், மீண்டும் சேதம் ஏற்படும் என்பதால், பொது போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படாதவாறு 50 கி.மீ., நீளத்துக்கு சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அப்பணிகளை, அக்டோபர் 10-ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, மற்ற பணிகளால் சேதமடைந்த சாலைகள், பகுதி சீரமைப்பு என்ற அடிப்படையில், ‘பேட்ஜ் வொர்க்’ பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். அதேநேரம், இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை, சாலை சீரமைத்தல் மற்றும் ஒப்பம் கோரும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பருவமழை மற்றும் இதர பணிகள் முழுமையாக முடிந்த பின், அச்சாலைகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT