Last Updated : 23 Sep, 2022 06:12 PM

 

Published : 23 Sep 2022 06:12 PM
Last Updated : 23 Sep 2022 06:12 PM

புதுச்சேரி | பேராசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காக அரசுக் கல்லூரி முதல்வர் தொடர் போராட்டம்

புதுச்சேரியில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்ட அரசு கல்லூரி முதல்வர் சசி காந்த தாஸ்.

புதுச்சேரி: கல்வியமைச்சர், உயர்கல்வித் துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழி ஏதும் நடக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியாக அரசு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அக்டோபரில் தொடர் உண்ணாவிரதமும், பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையான கடமைகளை சரிவர செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் தார்மிக அடிப்படையில் கல்லூரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக டாக்டர் சசி காந்த தாஸ் கடந்த 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்று செயல்படுகிறார். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், பதவி உயர்வின்றி 17 ஆண்டுகளாக உதவி பேராசிரியர்கள் பணிபுரிவதால் அவர்களின் கோரிக்கைகளை தீர்வு காணக் கோரி கடந்த ஆண்டு 175 நாட்களுக்கு தரையில் அமர்ந்து அலுவல்களை மேற்கொண்டார். இதையடுத்து கல்வியமைச்சர் நமச்சிவாயம், உயர்கல்வித்துறை அதிகாரிகள் அக்கோரிக்கைகளை தீர்வு காண்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை கல்லூரியில் மேற்கொண்ட முதல்வர் சசிகாந்ததாஸ் கூறுகையில், "நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடினோம். அதற்கு தடை விதித்து உயர்கல்வித் துறை செயல்பட்டது. அத்துடன் கல்வியமைச்சர், உயர் அதிகாரிகள் கோரிக்கைகளை தொடர்பான உறுதிமொழி படி ஏதும் நடக்கவில்லை. அதனால், தரையில் அமர்ந்துதான் நான் பணிகளை செய்து வருகிறேன். இது வெள்ளியோடு நூறாவது நாளை அடைந்தது. அத்துடன் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அடையாள உண்ணாவிரதமும் மேற்கொண்டேன்.

கல்லூரியில் போதிய வகுப்பறை இல்லை, உதவி பேராசிரியர்கள் பணியிடமும் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஆய்வகம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும். வெகுதொலைவில் இருந்து வருவோருக்கு போதிய பஸ் வசதி தேவை. உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தரவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியோற்றுவோருக்கு யூஜிசி பரிந்துரைப்படி ஊதியம் தரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

அரசு அதிகாரிகள் தொடர்ந்து அரசு கல்லூரியின் தேவைகளை புறக்கணித்து வரும் நிலை தொடருமாயின் வரும் அக்டோபர் முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டுள்ளேன். அதற்கும் எவ்வித பலனும் இல்லாமல் போனால் தான் பணிபுரியும் இந்த கல்லூரி மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் தேவையான கடமைகளை சரிவர செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் தார்மிக அடிப்படையில் முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x