Published : 23 Sep 2022 05:31 PM
Last Updated : 23 Sep 2022 05:31 PM
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருந்துள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை பகுதியில் கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் ராஜ், "இந்தப் புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து , விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT