Published : 23 Sep 2022 01:16 PM
Last Updated : 23 Sep 2022 01:16 PM

4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப டிஆர்பி தேர்வு: அமைச்சர் பொன்முடி தகவல்

அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம்

சென்னை: அரசுக் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மிக விரைவில் வெளியிடவுள்ளது" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிற உதவிப் பேராசிரியர்கள் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அவர்களில் 955 துணை பேராசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படாமலேயே இருந்தது. இவர்கள் 2012-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்கள்.

இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணிநிரந்தரம் செய்யவில்லை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்வது காலகாலமாக இருந்துவந்த நடைமுறை.

அதன்படி, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 2 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற 955 உதவிப் பேராசிரியர்கள் 9-ஆண்டுக்கு முன்தேதியிட்டு பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

அதேபோல, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள 41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசே ஏற்று நடத்தும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அரசு இதனை ஏற்று நடத்தவும் இல்லை, அதற்கான நிதியையும் ஒதுக்கவில்லை. இதைத்தொடர்ந்து உறுப்புக் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், 41 கல்லூரிகளும் அரசுடைமையாக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த கல்லூரிகளை அரசு ஏற்று நடத்துவதால், இக் கல்லூரிகளில் பணியாற்றிய, ஊதியம் பெறாமல் இருந்த கவுரவ பேராசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒரு 5500 பேர் கவுரவ பேராசிரியர்கள் உள்ளனர். இவர்கள் தரப்பில், நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

கல்லூரிகளில், 5000 வரை உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் இருக்கும். இதில், 4000 இடங்களை நிரப்ப தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த 4000 உதவிப்பேராசிரியர்கள் நியமிப்பதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மிக விரைவில், இன்னுமொரு 10 நாட்களில் அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இந்த தேர்வுக்குப் பின்னர் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வை எழுதி தேர்வாகி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சலுகை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x