Published : 23 Sep 2022 11:15 AM
Last Updated : 23 Sep 2022 11:15 AM
சென்னை: "புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக திகழ்வது புகையிலை பொருட்களின் பயன்பாடு தான்; அதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுமார் 91.60 லட்சம் உயிரிழப்புகளில், 66% அதாவது 60.46 லட்சம் உயிரிழப்புகள் இதயநோய், நுரையீரல் சார்ந்த சுவாச நோய்கள், புற்றுநோய், நீரிழிவு ஆகிய தொற்றா நோய்களால் நிகழ்ந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றமும், புகையிலை பயன்பாடும் தான் இதற்கு காரணம் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.
கரோனா, சளிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஒட்டுமொத்த உலகையும் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மனித வாழ்க்கையுடன் இரண்டர கலந்துவிட்ட தொற்றாநோய்கள் தான் மனிதகுலத்திற்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன என்பது தான் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள உண்மை ஆகும். உலகில் ஒவ்வொரு இரு வினாடிக்கும் ஒருவர் தொற்றா நோயால் உயிரிழக்கின்றனர் என்ற உண்மையை உலகம் எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 91.60 லட்சம் ஆகும். இதில் இதய நோய்களால் 25.66 லட்சம் (28%) பேர், சுவாச நோய்களால் 11.46 லட்சம் (12%) பேர், புற்றுநோயால் 9.20 லட்சம் (10%) பேர், நீரிழிவு நோயால் 3.49 லட்சம் (4%) பேர், பிற தொற்றாநோய்களால் 10.65 லட்சம் (11%) பேர் இறக்கின்றனர்.
இதய நோய்கள், நீரிழிவு நோய்களுக்கு பெரும்பாலும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் காரணம் ஆகும். சுவாச நோய்களுக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டுமின்றி, காற்று மாசு மிக முக்கிய காரணம். ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD) ஆகியவை தான் இந்தியாவில் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் சுவாச நோய்கள் ஆகும். சுவாச நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய மக்கள்தொகையில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 113 பேர் சுவாச நோய்களால் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத எண்ணிக்கையாகும்.
இந்தியாவில் ஒரு கன மீட்டர் காற்றில் பி.எம் 2.5 எனப்படும் நுண்துகள்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட குறைந்தது 9 மடங்கு அதிகமாக உள்ளது. படிம எரிபொருட்களை அதிகம் பயன்படுத்துவதும், பொதுப்போக்குவரத்தை விட தனி வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதும் இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் சரியான கொள்கை நிலைப்பாடுகள் மூலம் இதை சரி செய்ய முடியும். ஆனால், அதற்காக நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளவில்லை.
தொற்றா நோய்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அதிக அளவில் கட்டுப்படுத்தக் கூடியது புற்றுநோய் தான். அதற்கான நடவடிக்கைகள் கூட இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. ஆண்களை வாய்ப் புற்றுநோய், குரல்வளை புற்றுநோய் ஆகியவை தான் அதிகம் தாக்குகின்றன. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவை அதிகம் ஏற்படுகின்றன. பொதுவாக புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக திகழ்வது புகையிலை பொருட்களின் பயன்பாடு தான்; அதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
புகையிலை பயன்பாட்டின் தீயவிளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிலை பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கை படங்கள் அண்மைக்காலமாக பெரிய அளவில் அச்சிடப் படுவதை பாராட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், புகையிலை பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப் படாதது, பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை முறையாக செயல்படுத்தப்படாதது ஆகியவை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியவன் நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன். அதே நேரத்தில், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அவற்றின் மீது அதிக வரி விதிக்கும் முறையை நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அறிமுகப்படுத்தினேன். ஆனால், அந்த நடைமுறை தொடரவில்லை. சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் சில்லறை விலையில் 75% வரியாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் 28% ஜிஎஸ்டி வரி மற்றும் கூடுதல் தீர்வைகளையும் சேர்த்து 52% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது போதுமானதல்ல. இந்தியாவில் இப்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும்.
அதேபோல், பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட எந்த அரசும் முறையாக செயல்படுத்தவில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு இதய நோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பொது இடங்களில் புகை பிடிப்பது தான் முக்கிய காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 2030-ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒர் பங்கு குறைக்க வேண்டும் என்பது நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். ஆனால், அதை நோக்கி இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் பயணிக்கவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். இதய நோய்கள், நீரிழிவு நோய், சுவாச நோய் ஆகியவற்றை தவிர்ப்பது/கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். புற்றுநோயைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் எனது பதவிக் காலத்தில் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT