Published : 23 Sep 2022 07:20 AM
Last Updated : 23 Sep 2022 07:20 AM
சென்னை: இரட்டை தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல்ஏற்பட்டு கலவரமானது.
இதில், 47 பேர் காயமடைந்தனர். பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக ராயப்பேடடை போலீஸார் 4 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்தனர். பின்னர் வழக்குகளின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார், இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக இபிஎஸ் ஆதரவாளர்கள் 40 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 27 பேரும் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருதரப்பும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் கையெழுத்திட நேற்று காலையும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கையெழுத்திட நேற்று மாலையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக சிபிசிஐடி அலுவலகத்தின் வாயில் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நேற்று காலை இபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 40 பேர் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்களது ஆதார் அட்டை, முகவரி அடையாள அட்டை ஆகியவற்றை சரி பார்த்தே, அதிகாரிகள் கையெழுத்திட அனுமதித்தனர். இதேபோல மாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 27 பேர் ஆஜராகி கையெழுத்திட்டனர். இதற்காக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT