Published : 23 Sep 2022 04:00 AM
Last Updated : 23 Sep 2022 04:00 AM
கோவை கரும்புக்கடை பகுதியில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் சோதனை நடத்தி, அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில், மேம்பாலப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இழுத்து போட்டு, அந்த அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பொது சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து 10 பேரை கைது செய்தனர்.
இதேபோல, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி சார்பில் குனியமுத்தூர், ஒப்பணக்கார வீதி, சாயிபாபா காலனி உட்பட 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் - காங்கயம் சாலை சிடிசி கார்னரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தாராபுரம் சாலையில் திடீர் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதேபோல, திருப்பூர் புஷ்பா திரையரங்க பகுதியிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நேற்று போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். உதகையில் மறியலில் ஈடுபட்ட 15 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT