Published : 12 Nov 2016 01:11 PM
Last Updated : 12 Nov 2016 01:11 PM

கடைகள் பொது ஏலம், வாடகை உயர்வு பிரச்சினை: திண்டாட்டத்தில் உதகை நகராட்சி

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி, 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சுமார் 1.5 லட்சம் உள்ளூர் மக்களின் தேவைகள் மட்டுமின்றி, ஆண்டுக்கு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம், உதகை நகராட்சிக்கு உள்ளது.

150 ஆண்டுகளைக் கடந்தும், தன்னிறைவு பெறாமல் நிதி நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. நகராட்சியால் மின் கட்டணம் மற்றும் ஊழியர் ஊதியம் கூட வழங்க முடியவில்லை. இதனால், நகராட்சியின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உதகை நகராட்சி மார்க்கெட்டில் 1327 கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலமாக ரூ.2.8 கோடி வருவாய் கிடைக்கிறது.

வாடகையை உயர்த்த முடிவு

நகராட்சிகளின் வருவாயைப் பெருக்க, இக்கடைகளை ஏலம் விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், 9 ஆண்டு குத்தகை காலம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது.

இதனால், கடைகளை ஏலம் விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, நகர்மன்ற ஒப்புதலுக்கு தீர்மானம் வைத்தது. ஏலத்துக்கான அரசாணை காலாவதி ஆவதால், ஏலத்துக்கான தீர்மானம் நகர்மன்றங்களில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

உதகை, குன்னூர் நகர்மன்றங்களிலும் ஏலம் ரத்து செய்யப்பட்டு, கடைக்கான வைப்புத்தொகையை அதிகரிக்கவும், வாடகையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 சதவீதம் உயர்த்திக் கொள்ளவும் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.

இத்தீர்மானத்தை அரசுச் செயலர் நிராகரித்து, வழிகாட்டு நெறிகளின்படி கடைகளுக்கான வாடகை மறு மதிப்பீடு செய்து, பொது ஏலம் விட நகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.

இதனால், உதகை நகராட்சி மார்க்கெட் கடைகளை மதிப்பீடு செய்யும் பணி நடத்தப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக நகராட்சி வருவாய் அதிகாரி தேவகி கூறும்போது, “வாடகை செலுத்துவது தொடர்பாக நகராட்சிக் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறோம். உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த சிலர் ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூல் செய்யப்படும்” என்றார்.

வியாபாரிகள் எதிர்ப்பு

உதகை நகர வியாபாரிகள் சங்க முன்னாள் நிர்வாகிகள் கூறும்போது, “உதகை நகராட்சியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக, பல தலைமுறையாக வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இதனால், பொது ஏலம் நடத்துவது சாத்தியமற்றது.

உதகையில் ஒரே வாழ்வாதாரம் இக்கடைகள் தான் என்பதால், வாடகையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 சதவீதம் உயர்த்திக் கொள்ளவும் அரசை வலியுறுத்தி வருகிறோம்” என்றனர்.

நிதியை பெருக்க…

உதகை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.பிரபாகரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நகராட்சியின் முக்கிய நிதி ஆதாரம் கடை வாடகை தான். தற்போது, ஆண்டுக்கு ரூ.2.8 கோடி கிடைக்கிறது. வாடகை உயர்த்தப்பட்டால், ரூ.12.9 கோடி கிடைக்கும்.

நகராட்சியில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே ரூ.1 கோடி தேவைப்படுகிறது. மேலும், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள பொது நிதி தேவை. பொது ஏலம் மற்றும் வாடகை உயர்வுக்கு வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு உள்ளதால், கடந்த 3 மாதங்களாக வாடகை வசூல் செய்யப்படவில்லை.

இதனால், ஊதியம் வழங்கவும், மின்சாரக் கட்டணம் செலுத்தவும் நகராட்சிக்கு சிரமம் ஏற்பட்டது. போதுமான நிதி கையிருப்பு இருக்கும்பட்சத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

வியாபாரிகள் கோரிக்கையை அரசுச் செயலர் நிராகரித்துவிட்டார். இதனால், வாடகை உயர்வு குறித்து கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறோம். ஒரே நாளில் அனைத்துக் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க முடியாது என்பதால், தினமும் குறிப்பிட்ட அளவிலான கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

நோட்டீஸ் பெற்ற 7 நாட்களில் உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை என்றால், அந்தக் கடை பொது ஏலத்துக்கு கொண்டுவரப்படும்” என்றார்.

அரசியலில் சிக்கிய சங்கம்

கடந்த 25 ஆண்டுகளாக செயல்படும் உதகை நகர வியாபாரிகள் சங்கம், கடந்த ஜூன் முதல் வாடகைப் பிரச்சினையில் போராடி வருகிறது. வாடகைப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி, வியாபாரிகள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்த ஆளும் கட்சி முனைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.அர்ஜுணன் தலைமையில், முக்கிய நிர்வாகிகளுடன் வியாபாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, தற்போது பதவி வகித்துவரும் நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாம்.

இதனால், சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. வாடகைப் பிரச்சினைகளை தீர்க்கப் போராடி வந்த சங்கம், தற்போது அரசியலில் சிக்குண்டதால் வியாபாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x