Last Updated : 23 Sep, 2022 12:36 AM

3  

Published : 23 Sep 2022 12:36 AM
Last Updated : 23 Sep 2022 12:36 AM

கோவை | பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - போலீஸார் விசாரணை

படம் விளக்கம்: பாஜக அலுவலகம் முன்பு திரண்டிருந்த கட்சியினர்.  படம் : ஜெ.மனோகரன்.

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். அந்நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காந்திபுரத்தில் உள்ள வி.கே.கே.மேனன் சாலையில் பாஜக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் படிக்கட்டை ஒட்டியவாறு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (செப்.22) இரவு 9 மணியளவில் கட்சி பிரமுகர்கள் சிலர் தரைத்தளத்தில் கட்சி அலுவலகத்துக்கு செல்லும் படிக்கட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலை தூக்கி, கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர். அந்த பாட்டில் அலுவலகத்தின் படிக்கட்டு அருகேயுள்ள, மின்கம்பம் அருகே விழுந்தது. அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அருகே சென்று பார்த்த போது, மர்மநபர்கள் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, திரியை பற்ற வைத்து கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு சென்றதும், காற்றின் வேகத்துக்கு திரியில் இருந்த தீ அணைந்ததும் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, காட்டூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். காட்டூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு கிடந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை எடுத்து ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதற்கிடையே, கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு திரண்டு வந்து நிற்கத் தொடங்கினர். மேலும், பெட்ரோல் குண்டை வீசிய நபர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் வலியுறுத்தி, கோஷங்களையும் எழுப்பினர்.போலீஸார் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் செல்வது தெரியவந்தது. அந்தக் காட்சிகளை வைத்து பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x