Published : 22 Sep 2022 08:24 PM
Last Updated : 22 Sep 2022 08:24 PM
சென்னை: பதிவுத் துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். தமிழகத்தில் பதிவுத் துறை வருவாய் தொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து, அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரிபார்த்தல், டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.
அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணப் பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதல்வர் வரும் 28-ம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்கள்.
இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,59,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூ.5,757 கோடியை விட ரூ.2,325 கோடி அதிகமாகும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT