Published : 22 Sep 2022 06:06 PM
Last Updated : 22 Sep 2022 06:06 PM
புதுச்சேரி: ‘ஜிப்மரில் சிகிச்சை கிடைக்காததாலும், மருந்து, மாத்திரைகள் வழங்காததாலும் இறக்கும் நோயாளிகளின் குடும்பத்தாரை திரட்டி ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக பெருந்திரள் போராட்டத்தை நடத்துவோம்’ என்று புதுச்சேரி திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில், "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதாவது ஜிப்மரில் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் சிகிச்சை பெற்று நலமுடன், வீடு திரும்புவதற்கு மாறாக இந்த மருத்துவமனைக்கு ஏன் வந்தோம் என்று அவதியுற்று வெளியேறும் நிலைக்கு ஆளாக்கி வருகின்றது. இதனால் அங்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு ஆயுட்காலம் குறைகிறதே தவிர, சிகிச்சை பெற்று நலமுடன் வெளிய வரமுடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு அட்டையுள்ள வெளிமாநில நோயாளிகள் உடனடியாக சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டாலும்கூட, புதுச்சேரி நோயாளிகள் சேர்த்துக் கொள்ளவே மறுக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை.
தற்போது ஜிப்மர் மருந்தகத்தில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையின் நல்ல நிர்வாகம் என்பது நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கி வைத்து, கிடைக்கச் செய்வதுதான். அதற்கு மாறாக இருக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என்ற ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை திரும்பப் பெற்று, ஜிப்மருக்கு வரும் நோயாளிகளுக்கு என்னென்ன மருந்துகள் தேவைப்படுமோ அனைத்து விதமான மருந்துகளையும் வாங்கி இருப்பு வைத்து வழங்க வேண்டும். புதுச்சேரி குடியுரிமை உள்ள மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை கேட்காமலேயே இலவச சிகிச்சை அளிக்கவும் முன்வர வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஜிப்மர் நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஜிப்மரில் சிகிச்சை கிடைக்காததாலும், மருந்து, மாத்திரைகள் வழங்காததாலும் இறக்கும் நோயாளிகளின் குடும்பத்தாரை திரட்டி ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக பெருந்திரள் போராட்டத்தை திமுக நடத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT