Published : 22 Sep 2022 01:16 PM
Last Updated : 22 Sep 2022 01:16 PM

ஜிப்மரில் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப்படம்.

சென்னை: ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ''புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஜிப்மர் தான் உயிர்காக்கும் மருத்துவமனையாக திகழ்கிறது.

அங்கு மருத்துவத்திற்காக வரும் அனைவருக்கும் அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதை ஜிப்மர் நிர்வாகமும், அரசும் உறுதி செய்ய வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாகவே மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மருத்துவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பாமகவின் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, அதற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தான் மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாடு லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய ஜிப்மருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அங்கு நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x