Last Updated : 22 Sep, 2022 09:55 AM

1  

Published : 22 Sep 2022 09:55 AM
Last Updated : 22 Sep 2022 09:55 AM

சென்னை, கோவை, நெல்லை திமுக மாவட்ட செயலாளர்களை மாற்ற முடிவு: உதயநிதியின் பட்டியலுக்கு முக்கியத்துவம் என தகவல்

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்களை மாற்ற கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில், கடந்த 2021-ல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம் கட்சியினர் கட்டுக்கோப்பாக இருந்து பணியாற்றியதுதான் என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கை.

எனவேதான், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘நாற்பதும் நமதே’ என்று திமுகவின் அனைத்து கூட்டங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.

சமீபத்தில்கூட விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலும் இதே முழக்கத்தை வெளியிட்டார். அதேபோல், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதிலும் முனைப்புடன் உள்ளார்.

தற்போது கட்சியில், 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகிகள் தவிர மற்ற அமைப்புகளுக்கான தேர்தல் முடிக்கப்பட்டுள்ளது.

இதில், சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும், பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, கட்சியின் மிக முக்கியமான மாவட்டச் செயலாளர்கள், அவைத்தலைவர், துணை செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி செப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், திமுகவில் அமைப்புரீதியாக செயல்பட்டு வந்த 77 மாவட்டங்கள், நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கோவை, திருப்பூர், மதுரை, தருமபுரி மாவட்டங்களில் வரும் 5 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோயுள்ளது. பதவியை இழந்தவர்களில் அமைச்சரும் ஒருவர். வழக்கமாக திமுகவில் மாவட்டச் செயலாளரை கட்சி தலைமையே முடிவு செய்யும். கட்சி தலைமை அறிவிக்கும் நபரே தேர்தலில் போட்டியிடுவார்.

அவரே மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்படுவார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், மாவட்டச் செயலாளர்கள் தேர்வில் தானே நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார்.

எனவேதான், மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், மாற்றம் செய்ய எண்ணும் பல்வேறு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை கடந்த 3 நாட்களாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் தருமபுரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அப்போது அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, நேற்றும் சில மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசினார்.

மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த மாவட்டச் செயலாளர்கள் செயல்வீரர்களாக இருக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு உள்ளிட்டோரை உதாரணம் காட்டி கூட்டங்களில் ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாதபோது, கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

இதற்காக ஏற்கெனவே உள்ள மாவட்டச் செயலாளர்கள் குறித்தும், கட்சியில் சிறப்பாகப் பணியாற்றி வருவோர் குறித்தும் தனியாக குழுவை அமைத்தும், உளவுத் துறையில் இருந்தும் அறிக்கை பெற்றுள்ளார்.

இதன் அடிப்படையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி. தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்களில் மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, தூத்துக்குடியில் தனது ஆதரவு நிர்வாகிகளை நியமிக்க பட்டியல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட செயலாளர்கள் விவரம் செப்.26-ம் தேதிக்குப்பின் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர். இதையடுத்து, அடுத்த மாதம் நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

அடுத்த துணை பொதுச் செயலாளர் யார்?: திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது, சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவி விலகலால் காலியாக உள்ள துணை பொதுச் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

தற்போதைய நிலையில், அப்பதவிக்கு மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுதவிர மேலும் ஒரு துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படலாம் என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x