Published : 22 Sep 2022 04:07 AM
Last Updated : 22 Sep 2022 04:07 AM

நவராத்திரியை முன்னிட்டு கதர் வாரியம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை தொடக்கம்

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை குறளகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் கொலு பொம்மை, கலைநயமிக்க மண்பாண்டங்கள், பீங்கான் பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுதானியங்கள் விற்பனையை அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். உடன் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கதர் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் வெ.ஷோபனா, கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் பொ.சங்கர் உள்ளிட்டோர்

சென்னை: கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நவராத்திரியை முன்னிட்டு சென்னை குறளகத்தில் கொலுபொம்மை, மண்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்வாரியம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு சென்னை குறளகத்தில், கொலுபொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மையுடன், கலைநயமிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனை கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

இந்த விற்பனை மற்றும் கண்காட்சியை, கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்தார். கொலு பொம்மை, ‘காதி கோல்டு’ என பெயரிட்ட சிறுதானியங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலைநயமிக்க மண்பாண்டங்கள், பீங்கான் பொருட்கள், காதி திரவ சலவை சோப்பு ஆகியவற்றை விற்பனைக்கு அறிமுகம் செய்தனர்.

இதில், சிறுதானியங்களான தினை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு மற்றும் மூங்கில் அரிசி உள்ளிட்டவற்றை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ‘காதி கோல்டு’ என்ற பெயரில் அரை கிலோ கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் நிரப்பி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சிவகங்கை மாவட்டம், கண்டணூர் அலகில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக ‘காதி திரவ சலவை சோப்பு’ எனும் புதிய சலவை சோப்பும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்தாண்டு விற்பனைக் குறியீடாக ரூ.1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.85.94 லட்சத்துக்கு பொம்மைகள் விற்கப்பட்டன. இந்நிலையில் நேற்று தொடங்கிய கண்காட்சியிலும், ரூ.1.50 கோடி மதிப்பில் பொம்மைகள், கைவினை பொருட்கள் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விழாவில், துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையுரையாற்றியதுடன், 3 கைவினைஞர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கினார். தமிழ்நாடு கதர் கிராம தொழில்வாரிய தலைமை செயல்அலுவலர் பொ.சங்கர் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வெ.ஷோபனா சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x