Last Updated : 22 Sep, 2022 03:45 AM

 

Published : 22 Sep 2022 03:45 AM
Last Updated : 22 Sep 2022 03:45 AM

டெங்கு, டைபாய்டு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளால் மருத்துவமனைகளில் குவியும் பொதுமக்கள்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் வார்டு அருகே திரண்டிருந்த பொதுமக்கள். படம்: ம.பிரபு

சென்னை: டெங்கு, டைபாய்டு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல் பரவுவதால், அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்புகின்றன. சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, என்ன காய்ச்சல் என்பதைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. ஆரம்பத்தில் குழந்தைகள் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினைகளுடன் தினமும் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால், கூடுதலான படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி முதல் இதுவரை 1,160-க்கும் மேற்பட்டோரும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் தீவிரத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது வழக்கமான பருவகால காய்ச்சல்தான். 3 அல்லது 4 நாட்களில் சரியாகிவிடும். இதற்காக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, "காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் சிலருக்கு மட்டும் என்ன மாதிரியான காய்ச்சல் என்று பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர், அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் பெரும்பாலானோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவுக்கு வருவோர் மற்றும் கிளீனிக் செல்வோருக்கு, என்ன காய்ச்சல் என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்படுவதில்லை. அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவுகிறது. இதுவே காய்ச்சல் அதிகரிக்க முக்கியக் காரணம். எனவே, காய்ச்சல் பாதிப்புள்ள அனைவருக்கும் பரிசோதனை அவசியம்" என்றனர்.

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி கூறும்போது, "தற்போது இன்ஃப்ளூயன்சா, டெங்கு, டைபாய்டு என பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகிறது. எச்1என்1 பன்றிக் காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை.

எனவே, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பரிசோதனை நடத்தி, என்ன வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான், எந்தப் பகுதியில் என்ன காய்ச்சல் பரவியுள்ளது, எதனால் பரவியது என்பதைக் கண்டறிந்து, விரைவாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்றார்.

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் செப். 21-ல் (நேற்று) சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. செப். 22 (இன்று) முதல் 3 பேருக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. வழிகாட்டுதல்படி, தேவையானவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x