Published : 22 Nov 2016 09:03 AM
Last Updated : 22 Nov 2016 09:03 AM
தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் வெளியிடப்படும் புத்தகங்களை மின்னணு புத்தகங் களாக படிப்பதற்கு வசதியாக அவை இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சிய கமான சென்னை அரசு அருங் காட்சியகம், கடந்த 1851-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1882-ம் ஆண்டு முதல், தொல்லியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு புத்தகங்களையும் இதர பிரசுரங்களையும், அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இப்புத்தகங்களை மின்னணு புத்தகங்கள் (இ-புக்ஸ்) வடிவில் படிக்கும் வசதியை அருங்காட்சியகங்கள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அருங்காட்சி யகங்கள் துறை இயக்குநர் டி.ஜகந்நாதன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
1882-ம் ஆண்டு முதல் தொல்லியல், மானுடவியல், ஓவியம், சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங் காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய துறைகளில் பல்வேறு புத்தகங்களை அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்டு வருகிறது.
அருங்காட்சியகங்கள் துறை யின் வெளியீடுகள் உலகப் புகழ் பெற்றவையாகும். அருங்காட்சியக சேகரிப்பு பொருட்கள் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளின் விளைவாக அப்பதிப்புகள் இருப்பதால் அவை இவ்வுலகுக்கே சான்றாதார நூல்களாக உள்ளன.
240 புத்தகங்கள் வெளியீடு
இதுவரை 240 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத் தகங்களை மின்னணு புத்தகங்கள் வடிவில் படிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 180 புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 புத்தகங்கள் மார்ச் மாதத்துக்குள் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழக அரசின் எல்காட் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்ட புத்தகங்கள் ஆண்டு வரிசையின் அடிப்படையிலும், தனித்தனி துறைகளின் கீழும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வாசகர்கள் எளிதாக புத்தகங்களை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். இந்தப் புத்தகங்கள் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். www.chennaimuseum.org என்ற இணையதளம் மூலம் இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து படிக்கலாம்.
இவ்வாறு ஜகந்நாதன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT