Published : 06 Nov 2016 01:10 PM
Last Updated : 06 Nov 2016 01:10 PM

உள்ளாட்சி 33: மீண்டும் சொல்கிறேன், அரசுப் பள்ளிகள் உள்ளாட்சிகளிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்!

ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன்.

நீண்ட காலமாக பள்ளிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மீண்டும் மாற்றப்பட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்திவருபவர் மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜ கோபாலன். நேரு வலியுறுத்திய கல்வி நிலையங்களும் கூட்டுறவு அமைப்புகளும் ஒரு காலத்தில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், அவை படிப்படியாக தனது கண் எதிரே அழிவுற்றதை கண்ட நேரடி சாட்சியம் ச.சீ.இராஜகோபாலன். அவரிடம் வேறு எதைப் பற்றி பேசினாலும் ஏதோ ஒரு நொடியில் அவரது பேச்சு இந்த சீரழிவைப் நோக்கிச் சீறும்.

பொதுமக்களின் அறியாமை

“நான் ஏற்கெனவே ‘தி இந்து’-வுக்கு அளித்த பேட்டியில் பள்ளிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப் பட வேண்டும் என்று கருத்து தெரிவித்ததற்குத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அது எதிர்பார்த்தது தான். அதேசமயம் அவர்களின் மன உணர்வுகளை முற்றிலும் புறம்தள்ளி விட முடியாது. ஆரம்பத்தில் அவர் களுக்கு ஒன்றியத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகி யோரது இடையூறுகளும், அவமதிப்பு களும் இருந்தன. அதை நானே அறிவேன். மேலும் நானே தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய பல போராட்டங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறேன். ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் கல்வி சென்றுகொண்டிருக்கும் கவலைகிட மான நிலையையும் நமது குழந்தை களின் எதிர்காலத்தையும் கரிசனத் துடன் கவனிக்க வேண்டியது நமது கடமை அல்லவா.

சமீப காலங்களில் ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று கல்வியாளர்களே குற்றம்சாட்டு வதை கேட்டுள்ளேன். அப்போது ‘எந்த ஆசிரியர், எந்தப் பள்ளி, நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?’என்று கேட்பேன். அவர்களால் திட்டவட்டமாக பதில் அளிக்க முடிவதில்லை. சமூக ஆர்வலர் ஒருவர், ‘இரண்டு ஆசிரி யர் வந்தாலே ஆச்சரியம்’ என்றார். ‘பணியிடங்களே இரண்டுதானே” என்று நான் சொன்னபோது ஆச்சரியப் பட்டார். தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும் போது பொதுப் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஆசிரியர் பணியிடங்களே அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் பொது மக்கள் அறியாததன் விளைவே இந்தப் புரிதல் இன்மைக்குக் காரணம்.

காளான்களாக முளைத்த சங்கங்கள்

நான் மாவட்டக் கழகப் பள்ளிகளில் 16 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். மாவட்டக் கழகத் தலைவர், மாவட்டக் கழகங்கள் கலைக்கப்பட்ட பின் பொறுப்பு வகித்த மாவட்ட ஆட்சியர் ஆகியோர் எனக்கு மரியாதை அளிக்கத் தவறவில்லை. ஆனால், பள்ளிகள் கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட பின்னர் கல்வி அதிகாரிகள் என்னை ஊழியனாகவே பார்த்தனர். ஒரு சகாவாகப் பார்க்கவில்லை. காலனிய மனோபாவம் கல்வித் துறை அதி காரிகளுக்கும் தொற்றிக்கொண்டது. அங்கே தன்மானத்துடன் பணியாற்ற இயலாது என்று அறிந்தே நான் தனி யார் பள்ளிக்குச் சென்றேன். ஆனால், இப்போது தொடக்கப் பள்ளி ஆசிரியர் களுக்கு அதிகார வர்க்கத்தினர் மேம் பட்டவர்களாக போய்விட்டார்கள்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் களுக்குத் தனி இயக்கம் கண்டவர் மாஸ்டர் ராமுண்ணி. திடமான முதுகெலும்பையும் தந்தவர். அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளைத் தகர்த்தவர். கொள்கைப் பற்றே அவரது அரண். ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் அவரது ஒன்றுபட்ட இயக்கத்தைச் சிதறடித்தனர். ஓர் இயக்கம் இருந்த நிலை மாறி பல சங்கங்கள் காளான்களாக முளைத் தன. அவற்றில் பலவும் அரசு சார்பாக வும், அதிகாரிகளின் புகழ் பாடுபவை யாகவும் மாறிவிட்டன. ஆசிரியர் களுக்கு பணியிட மாறுதல் பெற்றுத் தருதலும், மாறுதலை தடுத்து நிறுத்து வதுமே தமது சங்கத்தின் தலையாய பணியாக கொண்டுள்ளன. இது ஆசிரி யர் இயக்கத்தின் கூட்டு பேர சக்தி யைக் குலைத்துவிட்டன. கொள்கைப் பற்றுடன் செயல்படும் இயக்கமே ஆசி ரியர்களைப் பாதுகாக்கும் அரண். மற் றவை கால வெள்ளத்தில் கரையும்.

மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளின் மேலாண்மை பற்றிப் பரிந்துரைக்க அன்றைய கல்விச் செயலர் ஆர்.ஏ.கோபால்சாமி, ஐ.சி.எஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு இடை நிலைக் கல்வி வாரியம் அமைக்கப் பட வேண்டும். அதன் பொறுப்பில் மாவட்டக் கழகப் பள்ளிகளும், நகராட்சி மற்றும் ஊராட்சிகள் நடத் தும் உயர்நிலைப் பள்ளிகளும் மாற்றப் பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்த வாரியம் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. வாரியத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது தனி நபர் தலை வராக இருப்பார். ஒரு கல்வி அலு வலர் செயலராக இருப்பார். ஒரு பொதுப் பள்ளித் தலைமை ஆசிரியர், ஒரு தனியார் பள்ளி தலைமை ஆசிரி யர் உட்பட ஏழு பேர் உறுப்பினர்கள்.

அரசு மானியங்கள்

தனியார் பள்ளிகளுக்கு மானி யம் வழங்கும் பொறுப்பும் இந்த வாரியத்துக்கு அளிக்கப்பட்டது. கல்வி செஸ், அரசு மானியம் ஆகியவை நிதி ஆதாரங்களாக இருக்கும். மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசு மானியம் வழங்கப்பட்டது. ஒரு மாதிரி கல்விச் சட்டத்தையும் அந்தக் குழு தயாரித்தது. இதன் பரிந்துரைகளை ஆசிரியர் இயக்கங்கள் வரவேற்றன. சில தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களும் இதே போன்று தம் பள்ளிகளுக்கும் ஓர் அமைப்பு வேண்டும் என்று கோரிக்கையை வைத்தன. ஆனால், குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்கவும் இல்லை; நிராகரிக்கவும் இல்லை. எந்த முடிவும் எடுக்காமல் கழக உயர்நிலைப் பள்ளிகள் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டன.

எம்.ஜி.ஆரிடம் முறையீடு

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தான் இந்த சீரழிவுகள் தொடங்கின. அவர் இந்த விஷயத்தில் நிறைய தவறுகளைச் செய்தார். உள்ளாட்சி களின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் இருந்தபோது ஆசிரியர்கள் தினசரி நேரம் தவறாமல் பள்ளிக்கு வந்தார் கள். இயல்பாகவே அவர்களுக்கு கல்வியைத் கற்றுத் தருவதில் லட்சிய வேகம் இருந்தது. தவிர, ஆசிரியர் களின் வருகையை பஞ்சாயத்துத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சமூக நல அலுவலர் மற்றும் கிராம மக்கள் கண்காணித் தனர். மக்கள் கட்டுப்பாட்டில் இருந் தன அரசுப் பள்ளிகள். மேலும், ஆசிரி யர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி யைத் தவிர, கால்நடை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் இருந்தன.

ஒருகட்டத்தில் இதனை ஆசிரியர் கள் விரும்பவில்லை. பஞ்சாயத்துத் தலைவர்களும் அதிகாரிகளும் எங்களை கொடுமை செய்கிறார்கள்; கற்பித்தல் வேலை மட்டுமில்லாமல் வேறு வேலைகளையும் வாங்குகிறார் கள் என்று எம்.ஜி.ஆரிடம் முறை யிட்டார்கள். அவரும் நிலைமை என்ன வென்று தீர விசாரிக்காமல் அரசுப் பள்ளிகளைத் மொத்தமாகத் தூக்கி கல்வித் துறையிடம் ஒப்படைத்து விட்டார்.

‘நம்ம பள்ளிகள்’

ஒரு விஷயம் தெரியுமா... இன்று அரசுப் பள்ளிகள் என்று அழைக்கிறோம். ஆனால், அன்று அவை மாவட்டக் கழகத்திலும், ஒன்றியத்திலும் இருந்தபோது அவற்றை மக்கள் ‘நம்ம பள்ளிகள்’ என்று அழைத்தார்கள். கல்வித் துறையில் தனியார் பள்ளிகள் புற்றீசலாக நுழைந்தப் பின்பே அவை ‘அரசுப் பள்ளிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

பிரிட்டனின் உள்ளாட்சிகளில் இரு அமைப்புகள் உண்டு. ஒன்று, உள்ளாட்சிக் குழு (Local County Council). மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட குழு. நமது நகராட்சிகளுக்கு ஒப்பானவை. மற்றொன்று, உள் ளாட்சி கல்வி ஆணையம் (Local Education Authority). உள்ளாட்சிக் குழு தேர்வு செய்யும் ஒரு நபரும் கல்வி ஆணையத்தில் இருப்பார். மற்றபடி அதில் கல்வியாளர்களும், பெற்றோர் களும் உறுப்பினர்கள். இந்த ஆணை யமே அதன் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளை நிர்வகிக் கிறது, ஆய்வு செய்கிறது. அதற்கான அதிகாரமும் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் சிறப்பாக இயங்கும் நிர்வாகம் இது.

அமெரிக்கா சென்றிருந்தபோது கனெக்டிக்ட் மாநிலக் கல்வி நிர்வாக அமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மாநில கல்விப் பொறுப்பு முழு மையும் அந்த அமைப்பைச் சார்ந்தது. 13 உறுப்பினர்கள் கொண்ட அந்த அமைப்பில் இரண்டு 12-ம் வகுப்பு மாணவர்களும் இருந்ததுதான் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. மற்ற உறுப்பினர்கள் உயர்மட்ட ஆலோ சனைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். சில மாநிலங்களில் தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிந்தேன். அந்த மாநிலம் மிகச் சிறப் பான கல்வி அளிக்கின்றது என்று அறிந் தேன். மாணவர், ஆசிரியர்களுக்கான விதிமுறைகள் நம் நாட்டை விடக் கடுமையாக அங்கு இருந்தன.

பள்ளிகள் சமூகத்தின் சொத்து. எங்கு பள்ளிக்கும் அது சார்ந்த சமூகத்துக்கும் நல்ல உறவு இருக்கின்றதோ, அங்கு கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவதைக் காணலாம். பழமையான பள்ளி களுக்கு ஊர் மக்கள் நிலமும் நிதியும் கொடுத்து உருவாக்கினார்கள். அவர் களுக்குத் தனியாக எந்த லாபமும் கிடையாது. எதிர்காலத் தலைமுறை கள் கற்றுத் தேர்ந்தவராக விளங்க வேண்டுமென்ற உன்னதமான நோக் கத்துக்காக அவர்கள் சேவை புரிந் தார்கள். அதனை பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக் கும் கடமை இன்றைய ஆசிரியர்க்கு உண்டு. உள்ளாட்சிகள் மூலமாக அது சாத்தியமாகும். இதைச் சொல்வதற் காக என் மீது கோபப்பட்டாலும் சரி...” என்கிறார்.

கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு

கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.86 ஆயிரத்து 193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இடைக்கால பட்ஜெட்டில் ரூ.24 ஆயிரத்து ரூ.820 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இடைக்கால பட்ஜெட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்காக ரூ.2 ஆயிரத்து 329.15 கோடியும், தேசிய இடைநிலை கல்வி இயக்கத்துக்காக ரூ.1,139.52 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்கிறது தமிழக அரசு. ஆனால், கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 40 ஆண்டுகளாகவே, படிப்படியாக குறைந்து வருகிறது என்கிறார் இராஜகோபாலன்.

“காமராஜர் ஆட்சி காலத்தில், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, மொத்த பட்ஜெட்டில் 35 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. அப்போது, மொத்த பட்ஜெட்டே ரூ. 100-க்குள்தான் இருக்கும். இப்போது, கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, 14.6 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கிறது. அதுவும், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடைநிலை கல்வி திட்டம்) நிதியும், இந்த சதவீதத்துக்குள் அடக்கம். தமிழக அரசின் நிதி என்று பார்த்தால், மிகவும் குறைவுதான். பெரும்பகுதி நிதியை, இலவச திட்டங்களுக்காக திருப்பிவிடுகின்றனர். பின், கல்விக்கு எங்கே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்? அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதில், தமிழக அரசுக்கு அக்கறை இல்லை” என்கிறார் அவர்.

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x