Published : 21 Sep 2022 11:44 PM
Last Updated : 21 Sep 2022 11:44 PM
மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை காலை மதுரை வருகிறார். அவரின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலமானவர்களை சந்தித்து பேசுகிறார்.
மதுரையிலிருந்து பகல் 12.30 மணிக்கு காரைக்குடிக்கு செல்கிறார். எம்ஏஎம் மகாலில் பாஜக அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் பாஜக மகளிரணி மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார். இரவில் காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் முடிந்து இரவில் செட்டிநாடு பேலஸில் தங்குகிறார்.
மறுநாள் செப். 23-ல் காலை 7 மணிக்கு பிள்ளையார்பட்டி கோயில் செல்கிறார். அங்கு வழிபாடு முடிந்ததும், பாஜக தொண்டர் வீட்டில் காலை உணவு அருந்துகிறார். மீண்டும் செட்டிநாடு பேலஸ் செல்லும் அவர் ஓபிசி மற்றும் எஸ்சி அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், பாஜக மாவட்ட தலைவர், பிரபாரிகள் (மாவட்ட பார்வையாளர்கள்) ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மதிய உணவுக்கு பிறகு சிவகங்கை நாடாளுமன்ற பூத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். மாலை 4 மணிக்கு மதுரைக்கு திரும்பும் அவர், மாலை 5.30 மணிக்கு மதுரையிலிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘‘பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை மதுரை வருகிறார். அவருக்கு பாஜக சார்பில் விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்படும். கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மருது பாண்டியர்களின் நினைவை போற்றும் வகையில் திருப்பத்தூரில் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT